கட்டணம் வசூலிக்காமல் தனியார் பள்ளிகளால் எப்படி ஆசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்க முடியும் என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கொரோனா தொற்று பரவல் பிரச்னையால், நாடு முழுவதும் உள்ள, பள்ளிகள், கல்லூரிகள் செயல்படவில்லை. பள்ளிகள் திறக்கப்படாவிட்டாலும், தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு, தினமும் பள்ளிகளின் நிர்வாக வேலை தரப்படுகிறது. தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள் வீட்டில் இருந்தவாறு, 'ஆன்லைனில்' பாடம் நடத்துகின்றனர்.
இதனிடையே தனியார் பள்ளிகள் மாணவர்களின் கல்வி கட்டணத்தை செலுத்துமாறு பெற்றோர்களை நிர்பந்திக்கக் கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு மற்றும் அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில் கட்டணம் வசூலிக்காமல் தனியார் பள்ளிகளால் எப்படி ஆசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்க முடியும் என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
ஆன்லைன் மூலம் வகுப்புக்களை நடத்தும்படி ஆசிரியர்களை வற்புறுத்தும்போது அவர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டாமா எனவும் கேள்வி எழுப்பியுள்ளது. இதுகுறித்து ஜூன் 30-ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.