கல்வி

11, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை 30 நிமிடங்கள் தாமதமாக தொடங்க நீதிமன்றம் உத்தரவு

11, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை 30 நிமிடங்கள் தாமதமாக தொடங்க நீதிமன்றம் உத்தரவு

webteam

11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை 30 நிமிடங்கள் தாமதமாக தொடங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குறைவான பேருந்துகள்தான் இயக்கப்படுவதாக பொதுநல மனு ஒன்று உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தேர்வுகளை ஒத்திவைப்பது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த தமிழக அரசு தரப்பு 11 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்படவில்லை என்ற தகவலை தெரிவித்தது.

இதனையடுத்து, பொதுத்தேர்வுகள் நேரத்தை 30 நிமிடங்கள் தாமதமாக துவங்க நீதிபதிகள் அறிவுறுத்தினர். அதாவது, வழக்கமாக 10 மணிக்கு தொடங்கும் தேர்வை, தற்போது 10.30 மணிக்கு தொடங்கி 1.30 மணிவரை நடத்த அறிவுறுத்தினர். மேலும், மாணவர்களுக்கு தேவையான போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்து தர வேண்டும் எனவும் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு மாவட்ட மாணவர்கள் தேர்வு மையத்திற்கு செல்ல ஏதுவாக சிறப்பு போக்குவரத்து வசதிகள் செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

பெரும்பாலான மாணவர்கள் பேருந்திலேயே வந்து தேர்வு எழுதுவதை கருத்தில் கொண்ட நீதிபதிகள், தாமாகவே முன்வந்து இந்த உத்தரவை வழங்கியுள்ளனர். மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.