கல்வி

அறுவை சிகிச்சை முடிந்து சிகிச்சை பெற்று வந்த போதும் தேர்வெழுத வந்த புதுக்கோட்டை மாணவி!

அறுவை சிகிச்சை முடிந்து சிகிச்சை பெற்று வந்த போதும் தேர்வெழுத வந்த புதுக்கோட்டை மாணவி!

webteam

உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலும் படிப்பின் மேல் உள்ள ஆர்வத்தால் மாணவி ஒருவர் தனது தாயுடன் , மருத்துவமனையிலிருந்து நேராக தேர்வு எழுதவந்தது பலரையும் பாராட்ட வைத்துள்ளது. 

உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையிலும் கூட பொதுத்தேர்வை எப்படியும் எழுதி விட வேண்டும் என்ற நோக்கோடு மருத்துவமனையில் இருந்து நேரடியாக புதுக்கோட்டை ராணியார் அரசு மேல்நிலைப் பள்ளியின் தேர்வு மையத்திற்கு மாணவி ஒருவர் வந்திருக்கிறார். மாணவியின் நிலை உணர்ந்து அவரை தேர்வு நடத்தும் அலுவலர்களும் தேர்வு எழுத அனுமதித்தனர். அந்த மாணவியின் கல்வி ஆர்வமும் கல்வித்துறை அதிகாரிகளின் மனிதநேயமும் ஏற்படுத்தியது.

புதுக்கோட்டை மச்சுவாடி பகுதியில் வசிக்கும் கூலித் தொழிலாளிகளான முத்துக்குமார் - தேவி தம்பதியின் மூத்த மகள் யோக ராணி. புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் யோகராணி பிளஸ் டூ கணித அறிவியல் படித்து வருகிறார். இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு மாணவி யோக ராணிக்கு மூக்கில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய சூழல் உருவானது.

இதனையடுத்து மாணவி யோகராணியை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவரது பெற்றோர்கள் அனுமதித்த. அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் இன்று பிளஸ் பொது தேர்வு தொடங்கியதால் அதனைத் தவற விட்டு விடக்கூடாது என்று எண்ணிய மாணவி யோகராணி தனது ஆசையை தனது தாயார் தேவியிடம் கூறியுள்ளார். பின்னர், மருத்துவர்கள் அனுமதியை பெற்று ஒரு ஆட்டோவில் மூலம் தேர்வு நடைபெறும் புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் பள்ளிக்கு காலை 10 மணிக்கு மாணவி மற்றும் அவரது தாய் வருகை தந்தனர்.

அந்த மாணவியின் நிலை உணர்ந்து தேர்வு நடத்தும் அலுவலர்கள் உடனடியாக அவரை தேர்வு எழுத தேர்வு மையத்திற்குள் அனுமதித்தனர். தற்போது அந்த மாணவி தேர்வு எழுதி வருகிறார். மாணவியின் கல்வி மீதான ஆர்வமும் காலம் தாழ்ந்து வந்தாலும் கல்வித் துறை அதிகாரிகள் மனிதநேயத்தோடு அந்த மாணவியை தேர்வு எழுத அனுமதித்ததும் காண்போருக்கு நெகிழ்வை ஏற்படுத்தியது.