கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அளிக்கும் பட்டப்படிப்பு சான்றிதழ்களில் மாணவர்களின் புகைப்படம் மற்றும் ஆதார் எண் இடம் பெற வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு (யுசிஜி) அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மனிதவள மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் மகேந்திரநாத் பாண்டே எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அப்போது அவர் பட்டப்படிப்புகளில் படிப்பதற்காக மாணவர்கள் சேரும் கல்லூரிகள் பெயர்களையும், படிப்பு முறை (முழுநேரம், பகுதி நேரம் அல்லது தொலைநிலைக் கல்வி) போன்ற விவரங்களையும் சான்றிதழ்களில் சேர்க்கவும் அதில் மாணவர்களின் புகைப்படங்கள் மற்றும் ஆதார் எண் இடம் பெற வேண்டும் எனவும் அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் யுஜிசி அறிவுறுத்தி உள்ளதாகவும் தெரிவித்தார். இதுதொடர்பாக நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் கடந்த மார்ச் 21ல் கடிதம் ஒன்றை அனுப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.