கல்வி

மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநர் - நீட் விலக்கு மசோதா கடந்துவந்த பாதை

மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநர் - நீட் விலக்கு மசோதா கடந்துவந்த பாதை

Veeramani

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசுக்கே திருப்பி அனுப்பியள்ள நிலையில், நீட் விலக்கு மசோதா கடந்து வந்த பாதையை தெரிந்துகொள்வோம்.

திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு 2021 ஜூலை மாதம் ஓய்வு பெற்ற நீதிபதி ஏகே ராஜன் தலைமையில் குழு அமைத்து நீட் தேர்வின் தாக்கங்கள் குறித்து ஆராயப்பட்டது. இக்குழுவின் பரிந்துரைகளையேற்று, தமிழ்நாடு சட்டமன்றத்தில், 2021 செப்டம்பர் 13 ஆம்தேதி நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு அந்த மசோதா, ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அந்த மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் ஆளுநர் ஆர்.என்.ரவி கிடப்பில் போட்டு வைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதேவேளையில், மத்திய அரசிடமும், தமிழ்நாடு அரசு சார்பில் தொடர்ந்து நீட் விலக்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சருடனான தமிழ்நாடு குழுவினரின் சந்திப்பு 3 முறை ரத்து செய்யப்பட்ட நிலையில், கடந்த ஜனவரி 17 ஆம்தேதி, அமித்ஷாவை சந்தித்து நீட் விலக்கு உள்ளிட்ட கோரிக்கைகள் மனுவாக தரப்பட்டன.

திமுக நாடாளுமன்ற குழு;j தலைவர் டி.ஆர்.பாலு, அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன், காங்கிரஸ் எம்.பி.ஜெயக்குமார், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் கோரிக்கை மனுவை அளித்தனர். நீட் தேர்வில் இருந்து கடந்த காலங்களில் தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கப்பட்டதுபோல், மீண்டும் விலக்கு அளிக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

இச்சூழலில், ஆளுநர் வெளியிட்ட குடியரசு தின செய்தியில், நீட் தேர்வுக்கு பிறகு தான் அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில் அதிகளவு சேருவதாக கூறியிருந்தார். நீட் தேர்வுக்கு எதிராக சட்டப்போராட்டம் நடத்தப்படும் என்று முந்தைய ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டிருந்ததற்கு முரணாக ஆளுநரின் குடியரசு தின செய்தி அமைந்திருந்தது. ஆயினும் சட்டமன்ற மசோதா குறித்து ஆளுநரிடம்இருந்து எந்த பதிலும் வெளியிடப்படவில்லை.

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரிலும், திமுக உறுப்பினர்கள், நீட் விலக்கு குறித்து முழக்கங்கள் எழுப்பி வந்தனர். இச்சூழலில், மக்களவையில் குடியரசு;j தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய ராகுல் காந்தி, நீட் தேர்வு குறித்த தமிழ்நாட்டின் கோரிக்கையை சுட்டிக்காட்டினார்.தமிழகம் மீண்டும், மீண்டும் நீட் தேர்வை விலக்க வேண்டும் என முறையிட்டாலும், அதை ஏற்காமல் துரத்தி விடுவதே மத்திய அரசின் வாடிக்கையாக இருப்பதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியிருந்தார்.

இந்தச் சூழலில், நீட் விலக்கு குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி. கடந்த 1 ஆம் தேதி அரசுக்கே திருப்பி அனுப்பியதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது