கல்வி

தமிழகத்தில் மருத்துவப்படிப்பு இடங்களை உயர்த்த நடவடிக்கை: அரசுக்கு வேல்முருகன் வலியுறுத்தல்

தமிழகத்தில் மருத்துவப்படிப்பு இடங்களை உயர்த்த நடவடிக்கை: அரசுக்கு வேல்முருகன் வலியுறுத்தல்

Veeramani

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பிற்கான இடங்களை உயர்த்த வேண்டும். இதன் மூலம், மருத்துவப் படிப்பிற்கு தமிழகத்தை சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்த முடியும்" என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் கூறியுள்ளார்.

மருத்துவப்பட்டிற்கான இடங்களை உயர்த்துவது குறித்து தி.வேல்முருகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் “தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள் அளவு இந்தியாவில்வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது. குறிப்பாக, தமிழகத்தில் மொத்தம் 26 அரசு மருத்துவக்கல்லூரிகளும், 15 சுயநிதி மருத்துவக் கல்லூரிகளும், 2 அரசு பல் மருத்துவக் கல்லூரிகளும், 18 சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன. தற்போது, மேலும் 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, தமிழகத்திலுள்ள அரசு மற்றும் சுயநிதிமருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கு 7.5% விழுக்காடு இடஒதுக்கீடு கடும் போராட்டத்திற்கு பிறகு அளிக்கப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில் படித்துவரும் ஏழை - எளிய  மற்றும் நடுத்தர வர்க்க மாணவர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது இந்த ஒதுக்கீடு என்பது சொற்பமானதுதான். இருப்பினும், அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 7.5% விழுக்காடு முன்னுரிமை அடிப்படையின் கீழ், மருத்துவப்படிப்பு மற்றும் பல் மருத்துவச் சேர்க்கையில் மொத்தம் 405 இடங்கள் கிடைக்கும்.

இந்த மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு, கடந்த மாதம், 18,19,20 ஆம் தேதிகளில் நடைபெற்றது. இதில் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைத்த மாணவ, மாணவிகள் சுயநிதி மருத்துவ கல்லூரிகள் நிர்ணயம் செய்த கட்டணத்தை கட்டமுடியாமல் காத்திருப்போர் பட்டியலில் வைத்துக்கொண்டனர். (இதற்கு முக்கிய காரணம் மருத்துவக்கலந்தாய்வுக்குப் பின்னரே தாமதமாக 20.11.2020 அன்று தான் 7.5% ஒதுக்கீடு மாணவர் கல்விக்கட்டணத்தை அரசே செலுத்தும் என்ற அறிவிப்பு). இதனையடுத்து, காத்திருப்போர் பட்டியலில் உள்ள மாணவர்களுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் பாதிக்கப்பட்ட மாணவர்களை கொண்டு  சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை உயர் நீதிமன்ற கிளையில், மூத்த வழக்கறிஞர்கள் மூலமாக  வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கு விசாரணையின்போது தமிழக அரசின் வழக்கறிஞர் அட்வகேட் ஜெனரல் அவர்கள் இந்த மாணவர்களை இந்தாண்டே மருத்துவக் கல்லூரியில் சேர தமிழக அரசு ஏற்பாடு செய்யும் என்ற ஒரு உத்திரவாதத்தை  இரண்டு நீதிமன்றத்திலும் தந்தார். மேலும் நீதிமன்றமும்  மாணவர்களின் சேர்க்கையை இந்தாண்டே உறுதிபடுத்த வேண்டும் என்று தமிழக  அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மேலும், தமிழகத்தில் இருக்கும் மருத்துவக் கல்லூரிகளில் தலா 2 இடங்களை தமிழக அரசு இந்தாண்டே ஒதுக்கி மருத்துவம் படிக்க வழி செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. எனவே, உயர் நீதிமன்றத்தின் உத்தரவை கருத்தில் கொண்டு, 51 மாணவர்களின் மருத்துவப்படிப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி, சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை பயன்படுத்திக் கொண்டு, தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் கூடுதலாக 2 இடங்களை மத்திய அரசிடம் கேட்டு பெற வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்.

மேலும், பெரும்பாலான அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்புக்காக 100 இடங்கள் மட்டுமே உள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் 4 அரசு மருத்துக் கல்லூரிகளில் தலா 250 இடங்கள் உள்ள நிலையில், அண்ணாமலை பல்கலைகழக மருத்துவக் கல்லூரி உள்பட 9 அரசு மருத்துவக் கல்லூரிகளில் தலா 150 இடங்கள் மட்டும் உள்ளன. இதனை தவிர, சென்னை இ.எஸ்.ஐ.சி மருத்துவக் கல்லூரி, ஈரோடு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரிஉள்பட 13 அரசு மருத்துவக் கல்லூரிகளில் தலா 100 இடங்கள் மட்டுமே உள்ளன. இதில் 15% விழுக்காடு இடங்கள், வேறு மாநிலத்தை சேர்ந்த மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. இதே போன்று, சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் வேறு மாநிலத்தை சேர்ந்த மாணவர்களுக்கே அதிக இடங்கள் ஒதுக்கப்படுகிறது.

எனவே அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பிற்கான எண்ணிக்கையை 250 ஆக உயர்த்த தமிழக அரசு முன் வர வேண்டும். இதன் மூலம், மருத்துவப் படிப்பிற்கு தமிழகத்தை சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்த முடியும். அதுமட்டுமின்றி, ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவ கனவுகள் நனவாகும். தமிழகத்தில் புதியதாக தொடங்கப்பட்டுள்ள 11 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கையை தொடங்க தேசிய மருத்துவ ஆணையத்தை எடப்பாடி பழனிசாமி அரசு வலியுறுத்த வேண்டும். 11 அரசு மருத்துவக் கல்லூரிகளில், சில மருத்துவக் கல்லூரிகளின் கட்டுமான பணிகள் முழுமை பெறாத நிலையில் உள்ளன.

இதனால், அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் உள்ள தலைமை அரசு மருத்துவமனைகளில், மருத்துவ படிப்புக்கான கல்லூரி வகுப்புகளை தற்காலிகமாக நடத்த தமிழக அரசு முன் வர வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.