பெரம்பலூர் அருகே அரசுப்பள்ளி ஒன்றில் மாணவர் சேர்க்கைக்கு கட்டணம் வசூலிக்கப்படுவது புதிய தலைமுறையின் கள ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் மாணவர்களிடம் வசூலிக்கப்பட்ட கட்டணம் திருப்பி அளிக்கப்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உறுதி அளித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஆறு, ஒன்பது மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. வேப்பந்தட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சார்ந்த மாணவர்கள் இப்பள்ளியில் சேர்ந்து வருகின்றனர். இந்த நிலையில், புதிதாக சேரும் மாணவர்களிடம் சேர்க்கை கட்டணம் வசூலிக்கப்படுவதாகப் புகார் எழுந்தது. இந்த புகாரை கையில் எடுத்து கள ஆய்வை மேற்கொண்டது புதிய தலைமுறை. ஆறாம் வகுப்பில் சேர 550 ரூபாயும், 9ஆம் வகுப்பில் சேர்வதற்கு 750 ரூபாயும், 11 ஆம் வகுப்பில் சேர்வதற்கு பாடப்பிரிவுகளுக்கு ஏற்ப 950 முதல் ஆயிரத்து 250 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுவதும் தெரியவந்தது.
இப்படி பெறப்படும் கட்டணத்திற்கு ரசீது எதுவும் வழங்கப்படுவது இல்லை. கொரோனா நிவாரண நிதியாக வழங்கப்பட்ட இரண்டாயிரம் ரூபாயில் இருந்து 950 ரூபாயை பிள்ளைகளின் சேர்க்கைக்காக செலுத்தியதாக பெற்றோர் கூறுகின்றனர்.
இதுகுறித்து வேப்பந்தட்டை அரசு பள்ளி ஆசிரியர் ஒருவரிடம் கேட்டதற்கு, ஆசிரியர் அல்லாத பணியாளர்களான அலுவலக உதவியாளர், காவலாளி போன்றவர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுவதாகக் கூறினார். மேலும், சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் சுசீலாவிடம் கேட்டதற்கு, அவரும் இதே பதிலை தெரிவித்தார்.
இந்த நிலையில் கட்டண வசூல் தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் வெங்கட பிரியா தெரிவித்துள்ளார். மாணவர்களிடம் வசூலிக்கப்பட்ட கட்டணம் திருப்பி அளிக்கப்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதிவாணன் தொலைபேசிய வாயிலாக புதிய தலைமுறையை தொடர்பு கொண்டு உறுதி அளித்துள்ளார்.