கல்வி

"பகல்களைவிட இரவுகளில் அதிக வெப்பம்"- ஆய்வில் தகவல்

webteam

சமீபத்தில் வெளியான ஆய்வு முடிவுகளின்படி, புவிவெப்பமயமாதல் காரணமாக பகல்களைவிட இரவுகள் அதிக வெப்பமாக இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 34 ஆண்டுகால பருவநிலை தொடர்பான தகவல்களின் அடிப்படையில் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

பிரிட்டனைச் சேர்ந்த எக்ஸ்டர் பல்கலைக்கழக அறிவியல் ஆய்வாளர்கள் 1983 முதல் 2017 வரை புவிவெப்பமயமாதல் பற்றி ஆராய்ச்சி மேற்கொண்டனர். இந்த சர்வதேச அளவிலான ஆய்வில் வெப்பநிலை, மேகமூட்டம், ஈரப்பதம் மற்றும் மழைப்பொழிவு பற்றிய பதிவுகளை மணிக்கணக்கில் ஆய்வு செய்துள்ளார்கள்.

இந்த ஆய்வு முடிவுகள் குளோபல் சேஞ்ச் பயாலஜி என்ற ஆய்விதழில் வெளிவந்துள்ளது. ஆண்டு வெப்பநிலையில் 0.25 டிகிரி சென்டிகிரேட் என்ற அளவுக்கு பகலுக்கும் இரவுக்குமான வேறுபாடு இருப்பதை அறிவியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.

பகல் நேரத்தில் அதிகரிக்கும் மேகமூட்டம் மேற்பரப்பை குளிர்ச்சியாக வைத்திருக்கிறது. ஆனால் அதே மேகமூட்டம் இரவில் வெப்பத்தை உறிஞ்சி இரவுநேர வெப்பநிலையை அதிகரிக்கச் செய்வதாக ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.

"புவிவெப்பமயமாதலின் சமச்சீரற்றத் தன்மை இயற்கையான உலகில் குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்துகிறது" என்று கூறுகிறார் எக்ஸ்டர் பல்கலைக்கழக ஆய்வாளர் டாக்டர் டேனியல் காக்ஸ்.