கல்வி

‘98.2% மதிப்பெண், அமெரிக்காவில் படிக்க வாய்ப்பு’பெற்றோரை பெருமைபடுத்திய ஏழை விவசாயி மகன்

Sinekadhara

உத்தரபிரதேசத்தின் லக்கிம்பூர் மாவட்டத்தில் உள்ள சரசன் கிராமத்தைச் சேர்ந்தவர் அனுராக் திவாரி. இவர் அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகத்தில் கல்வி பயில தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், அங்கு பொருளாதார பிரிவில் உயர் கல்வியை தொடரப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேச கிராமத்தை சேர்ந்த விவசாயி மகன் தனது 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 98.2 சதவீத மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளார். இது அமெரிக்காவின் புகழ்பெற்ற ஐவி லீக் பல்கலைக்கழகத்தின் முழு உதவித் தொகையையும் பெற அவருக்கு வழிவகுத்துள்ளது. இதனால் அமெரிக்காவில் உள்ள பிரபல கார்னெல் பல்கலைக்கழத்தில் உயர் படிப்பை தொடர வாய்ப்புக் கிடைத்துள்ளது. இது தொடர்பாக என்.டி.டி.வி விரிவான செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளிவந்த நிலையில், அனுராக் கணிதத்தில் 95, ஆங்கிலத்தில் 97, அரசியல் மற்றும் அறிவியலில் 99, பொருளாதாரத்தில் 100 மதிப்பெண்கள் பெற்றார். கார்னெல் பல்கலைக்கழகத்தில் படிப்பதை கனவாகக் கொண்டிருந்த அவர், கடந்த டிசம்பர் 2019இல் ஸ்காலஸ்டிக் மதிபீட்டுத் தேர்வில்(SAT) 1,370 மதிப்பெண்கள் பெற்றார்.

சேர்க்கைக்கான துணை தலைவர் ஜோனத்தன் ஆர் பர்டிக் அனுப்பிய கடிதத்தில், ‘’வாழ்த்துகள்! 2020ஆம் ஆண்டிற்கான கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சேர்க்கை தேர்வுக்குழு கார்னெல் பல்கலைக்கழகத்தில் சேர விண்ணப்பத்திற்கு ஒப்புதல் அளிக்கிறது’’ என்று எழுதியிருந்தார்.

ஆனால் இந்த நிலையை அவர் கடந்துவந்த பாதை அவ்வளவு சுலபமானது அல்ல என்கிறார் அந்த மாணவர். தனது படிப்பிற்காக சீதாப்பூர் மாவட்டத்தில் இருக்கும் கட்டாயம் விடுதியில் தங்கிப்படிக்கும் ஒரு பள்ளியில் சேரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மூன்று மூத்த சகோதரிகள் இருப்பதாகவும், குடும்பத்தில் போதிய வருமானம் இல்லை எனவும் பெற்றோர்களான கலம்பதி திவாரி மற்றும் சங்கீதா திவாரி கூறியுள்ளனர்.

‘’என் பெற்றோர் என்னை சீதாப்பூருக்கு அனுப்ப ஆரம்பத்தில் தயங்கினர். அப்பா விவசாயி. நானும் படிக்க சென்று விட்டால் விவசாயம் செய்யாமல் விட்டுவிடுவேன் என்று நினைத்தனர். ஆனால் என் சகோதரிகள்தான் பெற்றோரை சமாதானம் செய்து என்னை அனுப்பிவைத்தனர். இப்போது அனைவரும் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகின்றனர்.’’

ஆங்கிலத்தில் சரளமாக பேசுவது பற்றி கேட்டபோது, ‘’எங்கள் கிராமத்தில் இருந்தபோது ஆங்கிலத்தில் பேசியதில்லை. 6ஆம் வகுப்பிற்கு பிறகுதான் பேச ஆரம்பித்தேன். புதிய பள்ளியில் சேர்ந்த முதல் இரண்டு ஆண்டுகளில் என்னால் ஆங்கிலத்தில் பேச முடியவில்லை. மிகவும் சிரமப்பட்டேன். யாராவது பேசினால் புரிந்துகொள்வேன். ஆனால் போக போக சரளமாக பேசப் பழகிவிட்டேன். இன்னும் நன்றாக பேச முயற்சி எடுத்துவருகிறேன்’’ என்கிறார்.

வெளிநாட்டில் சென்றுதான் படிக்கவேண்டும். அதுவும் ஹுமானிட்டிஸ் அண்ட் ஆர்ட்ஸ் துறையில்தான் உயர்கல்வி பயிலவேண்டும் என்பதை கனவாகக் கொண்டு படித்திருக்கிறார். பத்தாம் வகுப்பு முடிந்தவுடன் அறிவியல், வர்த்தகம் போன்ற துறைகள்தான் சிறந்தது என அனைவரும் பரிந்துரைத்த போதிலும், அவரது கனவு படிப்பான ஹுமானிட்டிஸ் துறையையே தேர்ந்தெடுத்துள்ளார்.


டெல்லியில் உள்ள ஆசிரியர்கள், லிபரல் ஆர்ட்ஸ் துறையில் தொடர விரும்பினால் ஐவி லீக் கல்லூரிகளுக்கு முயற்சி செய்யலாம் என அறிவுறுத்தி இருக்கின்றனர். அதன்பேரில், தேர்வு எழுதி வெற்றிபெற்று இப்போது வெளிநாடு செல்ல தயாராகிவிட்டார். உயர்கல்வியை முடித்துவிட்டு நிச்சயமாக இந்தியாவிற்கு திரும்பி, இங்கு கல்வித்துறையில் பங்கேற்க விரும்புவதாக அவர் கூறியுள்ளார்.