கல்வி

மாநில கல்வி கொள்கை வரையறுக்க தலைமை செயலகத்தில் இன்று முதல்முறையாக கூடுகிறது வல்லுநர் குழு!

மாநில கல்வி கொள்கை வரையறுக்க தலைமை செயலகத்தில் இன்று முதல்முறையாக கூடுகிறது வல்லுநர் குழு!

நிவேதா ஜெகராஜா

மாநில கல்வி கொள்கை வரையறுக்க ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் முதல் கூட்டம் இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ளது.

தமிழகத்தில், தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக அரசு சார்பில் மாநில கல்விக் கொள்கையை வடிவமைக்க 13 பேர் கொண்ட குழுவொன்று அமைக்கப்பட்டிருந்தது. இந்த வல்லுநர் குழுவை சேர்ந்தவர்கள் பங்கேற்கும் முதல் கூட்டமானது இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பாடத்திட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள், வேலைவாய்ப்புக்கேற்ற பாடத்திட்டத்தை வடிவமைத்தல், மாநில மொழி, உரிமைகள், வரலாற்றுக்கு ஏற்ற வகையில் கொள்கைகளை வடிவமைத்தல் உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசனை நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இக்கூட்டத்தில் குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற நீதியரசர் முருகேசன் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில், உறுப்பினர்கள் ஜவஹர் நேசன், ராமானுஜம், சுல்தான் இஸ்மாயில், ராம சீனிவாசன், அருணா ரத்னம், மாடசாமி, எஸ்.ராமகிருஷ்ணன், விஸ்வநாதன் ஆனந்த், டி.எம்.கிருஷ்ணா, துளசிதாஸ், பாலு, ஜெயஸ்ரீ தாமோதரன் ஆகிய 13 பேரும், மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் கருப்பசாமி ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

முன்னதாக குழுவினர் அனைவரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெறுகின்றனர்.

- செய்தியாளர்: ரமேஷ்