பள்ளிக்குழந்தைகளை பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாப்பது குறித்த வழிகாட்டுதல் மற்றும் இணைய வழி வகுப்புகளுக்கான நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
- மாணவர்களின் பாதுகாப்பை தொடர்ச்சியாக மேற்பார்வை செய்யவும் அது சார்ந்த நடவடிக்கைகள் குறித்து மதிப்பீடு செய்யவும் ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக்குழு அமைக்கப்படும். பாதுகாப்புக்குழுவில் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பள்ளி நிர்வாக உறுப்பினர்கள் உள்ளிட்டோர் இடம் பெற்றிருப்பர்.
- பள்ளிகள் தொடர்பான குறைகளை தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி, மின்னஞ்சல் வசதிகள் அரசு சார்பில் ஏற்படுத்தப்படும்.
மாணவர் பாதுகாப்புக் குழு தங்களுக்கு வரும் புகார்களை பள்ளிக்கல்வித்துறையின் கீழ் அமைக்கப்பட்ட மாநில கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்க வேண்டும்.
- இணையவழிக் கற்றல் மற்றும் கற்பித்தல் நிகழ்வில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வகுப்பறைச் சூழலுக்கு ஏற்ப கண்ணியாக உடை அணிய வேண்டும்.
- இணைய வழி கற்றல் கற்பித்தல்களை முழுமையாக பதிவு செய்வதோடு பாதுகாப்பு ஆலோசனைக் குழுவினர் தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும்.
- பாதுகாப்பு ஆலோசனைக்குழு வாய்மொழி உள்பட எந்த முறையில் புகார்களை பெற்றாலும் பதிவேட்டில் பதிய வேண்டும்.
- அனைத்து பள்ளிகளிலும் ஆண்டுதோறும் நவம்பர் 15 முதல் 22 ஆம் தேதி வரை குழந்தைகள் துன்புறுத்தலைத் தடுக்கும் வாரம் என விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
இந்த வழிகாட்டு நெறிமுறைகள் தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக் கல்வி வாரியங்களைச் சேர்ந்த பள்ளிகளுக்கும் பொருந்தும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.