இன்று தமிழ்நாட்டில் நூற்றுக்கணக்கான பொறியியற் கல்லூரிகள் உள்ளன. லட்சக்கணக்கான பொறியியல் இடங்கள் உள்ளன. இந்த பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு எப்படி உள்ளது என்பது சமீப காலமாக மீண்டும் மீண்டும் கேள்விக்குள்ளாக்கப்பட்டு வரும் ஒரு விவாதப் பொருளாகும். இந்த கட்டுரையில் தகவல் தொழில்நுட்ப துறை சார்ந்த வேலை வாய்ப்புகள் பொறியியல் படிப்பு படித்தவர்களுக்கு எவ்வாறு ஒரு மிகப்பெரிய வாய்ப்பாக உள்ளது என்பதை நாம் காண்போம்.
ஒரு பொறியியல் மாணவனின் அறிவுத்திறன் மற்றும் கல்வித் தகுதி அவனுடைய கல்லூரி, கல்லூரி ஆசிரியர்கள், சக மாணவர்கள், பெற்றோர், பல்கலைக்கழகம், அரசுக் கொள்கைகள், கல்வியாளர்களின் செயல்பாடுகள் மற்றும் சமூகத்தின் நிலைப்பாடு என்கின்ற பல்வேறு கூறுகளின் அடிப்படையில் அமைகின்றது. இந்தக் கூறுகள் சரியாக செயல்படும் பட்சத்தில் நிச்சயமாக ஒரு பொறியியல் மாணவன் ஒரு முழுமையான மாணவனாக, வேலைவாய்ப்புத் தகுதி கொண்ட ஒரு இளைஞனாக சமூகத்தில் நிலை கொள்வான் என்பது நிதர்சனம்.
சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ் , கம்யூனிகேஷன்ஸ், போன்ற எந்த இந்த வகையான பொறியியல் பட்டம் பெற்றாலும் தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை வாய்ப்பை பெற்றுக் கொள்ளலாம் என்கின்ற ஒரு மனநிலையை மாணவர்கள் கொண்டுள்ளது உண்மை. ஆனால் இன்றைய தகவல் தொழில்நுட்பம் சார்ந்த வேலை வாய்ப்புகள், கணிப்பொறி அறிவியல் சார்ந்த கோட்பாடுகளை மாணவர்கள் ஒரு முழுத் திறனுடன் கற்றிருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. இந்த வகையான அடிப்படை ஆழ்ந்த கணிப்பொறியியல் கோட்பாடுகள் கணிப்பொறியியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் பாடமாகப் பயிலும் மாணவர்களுக்கு பாடத்திட்டத்திலேயே அமைந்துள்ளது. மற்ற பொறியியல் பட்டத்தைப் பெற்றிருக்கும் மாணவர்கள், அடிப்படையில் இந்த கணிப்பொறியியல் சார்ந்த கோட்பாடுகளைத், தங்கள் அடிப்படை வேளைத் திறன்களாகக் கொண்டிருக்காவிட்டால் அவர்களுக்கு தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை கிடைப்பது கடினம். வேலை கிடைத்தாலும் அவர்கள் தங்கள் திறன்களை சரியாக மேம்படுத்திக்கொள்ள விட்டால் வேலையில் நிலைப்பது கடினம்.
"சில லட்ச ரூபாய் செலவழித்து பொறியியல் கல்லூரியில் பொறியியல் பட்டம் வாங்கிவிட்ட பின், பத்தாயிரம் ரூபாய்க்கு கூட வேலை கிடைப்பது கடினமாக உள்ளது" என்கின்ற போன்ற ஒரு மாயத்தோற்றம் எப்பொழுதும் மக்களின் முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் திறனுள்ள மாணவர்களும் திறன்வாய்ந்த பணியாளர்களும் தகவல் தொழில்நுட்பத் துறையில் வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. பொறியியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த மிக வலுவான அடிப்படை அறிவு கொண்ட மாணவர்களுக்குச் சம்பளத்தை நிறைந்து கொடுக்க பல நிறுவனங்கள் தயாராக உள்ளன. ஆனால் நான் மேற்கூறியவாறு பல்வேறு கூறுகள் மாணவர்களுக்கு சரியான ஒத்துழைப்பு வழங்காத காரணத்தினால், மாணவர்களிடையே முழுத் திறனும் வெளிக்கொணரப்பட்டு விட்டதா என்பதுதான் கேள்விக்குறி. நிச்சயமாக தகவல்தொழில்நுட்பம் சார்ந்த பணிகள் இன்றும் மிக அதிகமாக உள்ளன. அந்த பணிகளை மேம்படுத்தி செய்வதற்கு, வேலைத் திறன் மிக்க பணியாளர்கள் மிகுதியாகத் தேவைப்படுகின்றனர். ஆனால் மிகுதியாக தேவைப்படும் திறன்மிக்க பணியாளர்களை உருவாக்குவதில் உள்ள சிக்கல்கள் தான் மிகப்பெரியதாக தெரிகிறதே தவிர, இப்பொழுதும் தகவல் தொழில்நுட்பத் துறையில் திறமையான வேலையாட்களுக்கு பணிகள் கொட்டிக்கிடக்கின்றன.
ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ், ப்ளாக்ச்சைன் ,விர்ச்சுவல் ரியாலிட்டி, ஆர்டிபிசியல் ரியாலிட்டி, பிக்டாட்டா போன்ற பல்வேறு தகவல் தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் இன்று வேலை செய்வதற்கு பல ஆயிரக்கணக்கான பணியாளர்கள் தேவைப்படுகின்றனர். இவ்வகையான மேம்படுத்தப்பட்ட துறைகளில் வேலை செய்வதற்கு மாணவர்கள் படிக்கும் பொழுதே தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். பொறியியல் படிப்பு தாண்டி இந்த வகையான மேம்படுத்தப்பட்ட தகவல் தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் வேலை செய்வதற்கு மாணவர்கள் சற்றே மெனக்கிட்டு தங்கள் தனித்த திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வகையான திறன்களை பெற்றுக்கொள்வதற்கு பல்வேறு வகையான புத்தகங்கள், கட்டுரைகள் மற்றும் பயிற்சி தகவல்கள் இணையத்தில் ஏராளமாக கொட்டிக் கிடக்கின்றன. யாருடைய உதவியும் இல்லாமல் தாங்களாகவே மாணவர்கள் இவ்வகையான திறன்களை பெற்றுக்கொள்வதற்கு அனைத்து வழிமுறைகளும் இன்று இணையத்தில் உள்ளன. மாணவர்களுக்குத் தேவை நல்ல நம்பிக்கையும் விடாமுயற்சியும் மேம்படுத்தப்பட்ட உழைப்பும் மட்டுமே ஆகும். இவ்வகையான விடாமுயற்சியாலும் தங்களது செயல்பாடுகளாலும் நாளும் திறன்களை வளர்த்துக் கொள்ளும் மாணவர்களை தங்களுடன் இணைத்துக் கொள்ள தொழில்நுட்பத்துறை இரு கரங்களை நீட்டி எப்பொழுதும் காத்துக் கொண்டிருக்கின்றது.
ஊக்கமது கைவிடேல்.