தமிழகத்தில் பொறியியல் படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பித்த சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று (அக்டோபர் 1) முதல் தொடங்குகிறது.
பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு ஒரு லட்சத்து 60 ஆயிரம் மாணவ மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 406 பேர் தகுதியுடையவர்களாகக் கருதப்பட்டனர். அவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது.
ஏற்கெனவே அறிவித்தபடி, விளையாட்டுப் பிரிவு, முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு இன்று (அக்டோபர் 1) தொடங்குகிறது. விளையாட்டுப் பிரிவில் 1,409 பேரும், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 149 பேரும், முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள் பிரிவில் 855 பேரும் விண்ணப்பித்து இருக்கின்றனர்.
இந்த சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு அக்டோபர் 5 ம் தேதி வரை நடைபெறும். பின்னர் அக்டோபர் 6 ம் தேதி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும். பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு அக்டோபர் 8 முதல் 27 ம் தேதி வரை நடைபெறும்.