கல்வி

இளைஞர வேலைவாய்ப்பு, தொழிலாளர் காப்பீடு குறித்து நாடாளுமன்றத்தில் புதிய அறிவிப்புகள்

இளைஞர வேலைவாய்ப்பு, தொழிலாளர் காப்பீடு குறித்து நாடாளுமன்றத்தில் புதிய அறிவிப்புகள்

Sinekadhara

இளைஞர வேலைவாய்ப்பு, தொழிலாளர் காப்பீடு குறித்து நாடாளுமன்றத்தில் புதிய அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.

வேலைவாய்ப்பு மற்றும் வேலைவாய்ப்பின்மை குறித்த வருடாந்திர தொழிலாளர் ஆய்வு தேசிய புள்ளியியல் அலுவலகத்தால் 2017-ஆம் ஆண்டிலிருந்து நடத்தப்பட்டு வருகிறது. 2018-19ஆம் ஆண்டுக்கான ஆய்வின் படி, 15 வயதுக்கு மேற்பட்டவர்களில் நிலவும் வேலைவாய்ப்பின்மை விகிதம் 5.8 சதவீதமாகும். கொரோனா பெருந்தொற்று காரணமாக அதிக அளவிலான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பினர். எனவே இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காக தற்சார்பு இந்தியா திட்டத்தை அரசு அறிவித்தது.

பிரதமரின் ஏழைகள் நல திட்டத்தின் கீழ், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் தொழிலாளர்களின் பங்கு மற்றும் நிறுவனங்களின் பங்கு ஆகிய இரண்டையுமே 2020 மார்ச் முதல் ஆகஸ்ட் வரை அரசு செலுத்தியது. தகுதியுள்ள 38.82 லட்சம் தொழிலாளர்களின் கணக்குகளில் மொத்தமாக 2567.66 கோடி ரூபாய் செலுத்தப்பட்டது. தேசிய புள்ளியியல் அலுவலகத்தால் நடத்தப்பட்ட வருடாந்திர தொழிலாளர் ஆய்வின்படி, 15 வயதுக்கு மேற்பட்டோருக்கான பணியாளர் மக்கள்தொகை விகிதம் 51.4 ஆக தமிழ்நாட்டில் உள்ளது.

இதற்கிடையே, தொழிலாளர் அரசு காப்பீட்டு நிறுவனத்தின் உறுப்பினர்களின் பணிக்கு ஆபத்து ஏற்படும்போது அவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்குவதற்காக ’அடல் பீமித் வியாக்தி கல்யாண் யோஜனா’ என்னும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது தற்போது இன்னும் விரிவு படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு பணியாளரை பணியைவிட்டு அனுப்புவதற்கு சில மாதங்களுக்கு முன்புவரை தொழிலாளர் அரசு காப்பீட்டு கட்டணத்தை நிறுவனங்கள் செலுத்தவில்லை என்றாலும், அந்த காலத்திற்கான காப்பீடும் பணியாளர்களுக்கு வழங்கப்படும்.

இத்திட்டத்தின்படி உறுப்பினர்களின் ஊதியத்தில் சராசரியாக 50 சதவீத தொகை 90 நாட்களுக்கு அவர்களுக்கு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு வழங்கப்படுகிறது.