கல்வி

மார்ச் 21 முதல்... அக்டோபர் 30வரை - 7.5 சதவீத உள்ஒதுக்கீடு கடந்து வந்த பாதை..!!

மார்ச் 21 முதல்... அக்டோபர் 30வரை - 7.5 சதவீத உள்ஒதுக்கீடு கடந்து வந்த பாதை..!!

webteam

நீட் தேர்வுக்கு பிறகு மருத்துவப் படிப்பில் சேரும் அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வந்ததால், அவர்களுக்கு பிரத்யேகமாக உள்ஒதுக்கீடு அளிக்கும் சிறப்பு திட்டம் நிறைவேற்றப்படும் என சட்டப்பேரவையில் கடந்த மார்ச் 21ஆம் தேதி 110 விதியின் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து பரிந்துரைக்க மார்ச் இறுதியில் ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு, அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கலாம் என கடந்த ஜூன் 8 ஆம் தேதி அரசுக்கு பரிந்துரை வழங்கியது.

அந்த பரிந்துரைகளை ஏற்ற தமிழக அரசு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க முடிவு செய்து, ஜூன் 15-ல் அமைச்சரவை ஒப்புதலும் அளித்தது. பின்னர் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் அவசரமாக சிறப்பு சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.  பல விளக்கங்கள் வேண்டுமென ஆளுநர் அவசர மசோதாவை அரசிற்கு திருப்பி அனுப்பினார். இதையடுத்து, அரசு தரப்பில் விளக்கங்கள் அளித்தும் ஆளுநர் அதனை ஏற்கவில்லை. பின்னர் செப்டம்பர் 15ஆம் தேதி சட்ட மசோதாவாக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

அன்றைய தினமே ஆளுநரின் ஒப்புதலுக்கு சட்ட மசோதா அனுப்பி வைக்கப்பட்டது. நீட் தேர்வு முடிவுகளும் வெளியான போதிலும் ஒப்புதலுக்கு அனுப்பி ஒன்றரை மாதங்கள் ஆன நிலையிலும் 7.5 சதவீத உள்இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளிக்கவில்லை.
ஆளுநரின் ஒப்புதலுக்கு தமிழகமே காத்திருந்த நிலையில், அரசமைப்பு சட்டம் 162ஐ பயன்படுத்தி மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்இடஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு அதிரடியாக நேற்று அரசாணை வெளியிட்டது

இந்நிலையில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு இன்று ஆளுநர பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்தார். ஒப்புதலும் கிடைத்துள்ளதால் விரைவில், தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டு மருத்துவ கவுன்சிலிங் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.