நீட் தேர்வு மையங்கள் முகநூல்
கல்வி

நீட் | லட்சங்களில் கட்டணம்... புற்றீசல்போல் பெருகும் பயிற்சி மையங்கள்... மன அழுத்தத்தில் மாணவர்கள்!

நிரஞ்சன் குமார்

கல்வி இங்கு வியாபாரமானதில், மிகப்பெரிய பங்கு பயிற்சி மையங்களுக்கு இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. குறிப்பாக நீட் போன்ற போட்டித்தேர்வுகள் வரத்தொடங்கியதில் இருந்து அதற்கான பயிற்சி மையங்கள் நாடு முழுவதும் புற்றீசல் போல பெருக தொடங்கி விட்டன. டெல்லி, லக்னோ, மும்பை, புனே, ஐதராபாத், சென்னை போன்ற பெருநகரங்களில் இத்தகைய பயிற்சி மையங்களை அதிகம் காணலாம். அதிலும், ராஜஸ்தானின் கோட்டா நகரம் முழுக்க முழுக்க பயிற்சி மையங்களால் நிரம்பி வழிகிறது.

நாடு முழுவதும் கிளைகளை பரப்பி இருக்கும் சில நீட் பயிற்சி மையங்கள், ஒரு மாணவரிடம் ஓராண்டுக்கு ஓன்றரை லட்சம் முதல் மூன்று லட்சம் வரை கட்டணம் வசூலிப்பதாகக் கூறப்படுகிறது. பெரும்பாலும் முதல்முறை வெற்றி பெறுபவர்களின் எண்ணிக்கை இங்கு குறைவு என்பதால், 2 முதல் 3 ஆண்டுகள் வரை அவர்கள் பயிற்சி மையத்திலேயே இருக்க, 7 லட்சம் ரூபாய் வசூல் செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிலும் மாணவர்களுக்கு தங்கும் வசதி, உணவு ஆகியவற்றை பார்த்துக்கொள்ளும் பயிற்சி மையங்கள், இதற்காக தனி பில்லும் போடுகின்றன. அதிகாலையில் தொடங்கும் பயிற்சி, நள்ளிரவு வரை தொடர்கிறது. வாரத்தேர்வு, மாதத்தேர்வு என ஒரு நீட் தேர்வு எழுதுவதற்கு முன்பு 100 தேர்வுகளை அந்த மாணவர்கள் பயிற்சி மையங்களில் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. வெளியூரில் பயிலும் மாணவர்களுக்கு, பண்டிகை நாட்களில் கூட விடுமுறை வழங்கப்படாமல் வகுப்புகள் வைக்கப்படுவதால் அவர்கள் அதீத மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.

கடந்தாண்டு கோட்டா நகரில் மட்டும் 30 மாணவர்கள் தற்கொலை செய்ததற்கு மாணவர்களின் மன அழுத்தமே காரணம் எனக் கூறப்படுகிறது. இவை அனைத்தையும் முறைப்படுத்த வேண்டும் என கல்வியாளர்கள் குரல் கொடுத்து வந்தாலும், அதற்கான நடவடிக்கை என்பது துளியளவும் கூட நடந்தபாடில்லை.

தற்போது நடந்து முடிந்த நீட் தேர்வில், வினாத்தாள் கசிவு மற்றும் பிற குளறுபடிகளுக்கு பின்னணியிலும் பயிற்சி மையங்களின் தலையீடு இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல், விவாதபொருளாகி இருக்கிறது.