கல்வி

கடலூர்: மருத்துவ படிப்புக்கு கூடுதல் கட்டணம்... 45 வது நாளாக மாணவர்கள் போராட்டம்

கடலூர்: மருத்துவ படிப்புக்கு கூடுதல் கட்டணம்... 45 வது நாளாக மாணவர்கள் போராட்டம்

kaleelrahman

சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக்கல்லூரியில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை வசூலிக்கக் கோரி 45 வது நாளாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைக் கழகம் அமைந்துள்ளது. இங்கு கலை, அறிவியல், இசை, மருத்துவம் என பல்வேறு துறை படிப்புகள் வழங்கபட்டு வருகிறது. இங்கு நடைபெற்ற நிர்வாக குளறுபடியால் கடந்த 2013 ஆம் ஆண்டு இப்பல்கலைக் கழகத்தை அரசு கையகபடுத்துவதாக அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்து, இதற்காக தனி சட்டம் இயற்றபட்டு அண்ணாமலை பல்கலை கழகம் அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது.


ஆனால் இன்றுவரை ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மட்டும் சுயநிதி கல்லூரியாகவே செயல்படுவதாக மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். தனியார் கல்லூரியை விட மூன்று மடங்கு கூடுதல் கட்டணமும் அரசு கல்லூரியை விட 30 மடங்கு கூடுதல் கட்டணமும் வசூலிப்பதாக கூறி, கடந்த 42 நாட்களாக மாணவர்கள் போராடி வருகின்றனர். அரசு கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிக்க அரசு கல்லூரி கட்டணமாக ரூ.13600, தனியார் கல்லூரியில் 3.80 லட்சமும் கட்டணமாக நிர்ணயித்துள்ள நிலையில் ராஜா முத்தையா கல்லூரியில் 5.6 லட்சம் கட்டணமாக வசூல் செய்யப்படுவதாக மாணவர்கள் குற்றம் சாட்டினர்

 மேலும், ’அரசு கல்லூரி கட்டணத்தை மட்டுமே வசூல் செய்ய வலியுறுத்தி 44 நாட்களாக இரவு பகல் பாராமல் ஆர்ப்பாட்டம், பேரணி, மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம், கருப்பு பலூன் பறக்கவிடுதல், மனித சங்கிலி, கண்ணீர் வடிக்கும் போராட்டம் என பல்வேறு வகையான போராட்டங்கள் தொடர்ந்தும் இதுவரை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’ என்றனர்


இந்நிலையில் மாணவர்கள் நேற்று முதல் காலவரையற்ற தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து கல்லூரிக்கு தொடர் விடுமுறை அளித்தும் மாலை 4 மணிக்குள் விடுதியை விட்டு மாணவர்கள் வெளியேறவும் நிர்வாகம் அறிவித்தது. அதனை ஏற்காமல் மாணவர்கள் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் போராட்டத்தை தொடர்ந்தனர். மாலை விடுதிக்குள் அனுமதி மறுத்ததால் விடுதி வளாகத்தில் மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து 400 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இரவு முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை முதல் அவசர சிகிச்சை பிரிவிலும் பணி புறக்கணிப்பு செய்வதாக தெரிவித்த முதுநிலை மருத்துவ மாணவர்கள் அரசு தங்கள் கோரிக்கை ஏற்கும் வரை காலவரையற்ற போராட்டம் தொடரும் எனவும் அறிவித்துள்ளனர்.