கல்வி

நாடு முழுவதும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை செப்டம்பருக்குள் முடிக்க அறிவுரை

நாடு முழுவதும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை செப்டம்பருக்குள் முடிக்க அறிவுரை

Sinekadhara

கொரோனா பாதிப்பால் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், நாட்டிலுள்ள அனைத்துக் கல்லூரிகளிலும் முதலாண்டு மாணவர் சேர்க்கை செப்டம்பர் மாத இறுதிக்குள் நடைபெறவேண்டும் என பல்கலைக்கழக மானிய ஆணையம் அறிவுரை அளித்துள்ளது.

முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு அக்டோபர் 1-ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்க வேண்டும் எனவும் கல்லூரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ப்ளஸ் 2 மாணவர்களுக்கு இந்த வருடம் பொதுத்தேர்வு நடைபெறாத நிலையில், அவர்களுடைய மதிப்பெண்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளிவரவுள்ளது. இந்நிலையில் மேலும் தாமதமின்றி கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை மற்றும் அவர்களுக்கு கற்பித்தல் ஆகியவற்றை விரைவாக நடத்த வேண்டும் என பல்கலைக்கழக மானிய ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

கோவிட் பிரச்னை தொடர்வதால் கல்லூரி மாணவர்களுக்கு எப்படி தேர்வுகள் நடத்துவது என்பது குறித்த அறிவுரைகளும் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான விரிவான அட்டவணை ஒன்றையும் ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்த விவரங்கள் அடங்கிய சுற்றறிக்கை நாடு முழுவதும் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

- கணபதி சுப்பிரமணியன்