சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி வரை பொதுத்தேர்வு நடத்தப்பட வாய்ப்பு இல்லை என மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்தார்.
கொரோனா ஊரடங்கு காரணமாக அனைத்துமே மூடப்பட்ட நிலையில் பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டன. மாணவர்களின் கல்வி தடைபட்டுவிடக் கூடாது என்பதற்காக ஆன்லைன் வகுப்புகளும், தேர்வுகளும் நடத்தப்பட்டன. ஆனால் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படாது என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செயல்முறை தேர்வுகள் ஜனவரி மாதத்திலும், பொதுத்தேர்வுகள் பிப்ரவரியில் தொடங்கி மார்ச் மாதத்தில் நிறைவு பெறுவது வழக்கம். ஆனால் இந்த கல்வியாண்டில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக இந்த நடைமுறை சாத்தியமில்லை என கூறியுள்ள அமைச்சர் பொக்ரியால் தேர்வை எப்போது நடத்துவது என்பது குறித்து சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் கருத்தையும் கேட்ட பின்னர் முடிவு செய்யப்படும் என அறிவித்தார்.