கல்வி

நாளை மாலை சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள்?

webteam

சிபிஎஸ்இ 12-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் நாளை மாலை அல்லது நாளை மறுநாள் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிபிஎஸ்இ 12-ம் வகுப்புத் தேர்வுகள், ஏப்ரல் மாதம் நடைபெற்றன. இந்தத் தேர்வில் கேட்கப்பட்ட கடினமான கேள்விகளுக்கு, கருணை மதிப்பெண் வழங்கும் முறையை ரத்து செய்வதாக சிபிஎஸ்இ இயக்குநரகம் அறிவித்தது. 

இதை எதிர்த்து, டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் குழு, சிபிஎஸ்இ-யின் முடிவுக்குக் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், இந்தத் திடீர் அறிவிப்பால் மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் எனத் தெரிவித்தது. இந்த ஆண்டில் புதிய ரத்து முடிவுகள் எதையும் அமல்படுத்த வேண்டாம் எனவும் சிபிஎஸ்இ இயக்குநரகத்துக்கு அறிவுறுத்தியது. நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து 24ம் தேதி வெளியாக வேண்டிய தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை.

இதுகுறித்து, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் சட்டவல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் “இதுகுறித்து சிபிஎஸ்இ விரைவில் அறிவிப்பு வெளியிடும். அனைவருக்கும் நீதி கிடைக்கும். எனவே மாணவர்கள் இதுகுறித்து கவலைப்படத் தேவையில்லை” என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவை மதித்து செயல்பட சிபிஎஸ்சி முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப் போவதில்லை என சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது. இதனால் சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாவதில் இருந்த சிக்கல் தீர்ந்துள்ளது.