கல்வி

“சிவில் சர்வீஸ் தேர்வின் வயது வரம்பைக் குறையுங்கள்” - நிதி ஆயோக் பரிந்துரை

“சிவில் சர்வீஸ் தேர்வின் வயது வரம்பைக் குறையுங்கள்” - நிதி ஆயோக் பரிந்துரை

webteam

ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் உள்ளிட்ட சிவில் தேர்வு எழுதுவோருக்கான வயது வரம்பை குறைக்கக் கோரி மத்திய அரசுக்கு நிதி ஆயோக் பரிந்துரை செய்துள்ளது.

இந்தியாவில் தற்போது மத்திய மற்றும் மாநில நிர்வாகங்களில் 60க்கும் மேற்பட்ட சிவில் துறைப் பணிகள் உள்ளன. இந்தத் தேர்வுகளை எழுதும் தேர்வாளர்களுக்களில் பொதுப்பிரிவினருக்கான தற்போதைய வயது வரம்பு 32 ஆக உள்ளது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைச் சேர்ந்தோர் 35 வயது இந்தத் தேர்வை எழுதலாம். அத்துடன் பட்டியல் மற்றும் பழங்குடியினத்தவர் 37 வயது வரை தேர்வு எழுத தகுதியுள்ளது. இந்த வயது வரம்பைக் குறைக்க வேண்டும் என்று 2016ஆம் ஆண்டில் ஏற்கெனவே பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும் நிதி ஆயோக் பரிந்துரை செய்துள்ளது. 

இந்தப் பரிந்துரையின் படி, பொதுப்பிரிவினருக்கான வயது வரம்பை 27 எனவும், பிற்படுத்தப்பட்டோருக்கான வயது வரம்பை 30ஆகவும் குறைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பட்டியல் மற்றும் பழங்குடியினத்தவருக்கான வயது வரம்பை 32ஆக குறைக்கலாம் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மத்திய மற்றும் மாநில அரசுகளின் பணிகளுக்கான தேர்வை ஒரே தேர்வாக மாற்றி நடத்தவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

அதன்மூலம் தேர்வில் வெற்றி பெறுவபர்களை மாநில அரசுகள் தங்கள் பணிகளில் நியமிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் தேர்வுகளில் வெற்றி பெறுபவர்களை திறமை மற்றும் தர வரிசையையின் அடிப்படையில் பிரித்து, அவர்களுக்கு ஏற்றவாறு குடிமைப் பணிகளை ஒதுக்கீடு செய்யலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.