கொரோனா தொற்று அதிகமாக பரவி வருவதால், மாணவர்களுக்கு நடத்தப்பட இருக்கும் பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட் கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ள வீடியோவில் “கொரோனா தொற்று அதிகமாக பரவிவரும் இந்த நெருக்கடியான சூழ்நிலையில், தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நாம் உறுதுணையாக இருக்க வேண்டும். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு 1 லட்சத்து 45 ஆயிரமாக உள்ளது.
ஆகவே இந்த சூழ்நிலையில் பொதுதேர்வில் உள் மதிப்பீட்டு முறையாலான தேர்வு முறையை கையாளலாம் என நான் கருதுகிறேன். அப்படியில்லை என்றால் இது பலரின் வாழ்கையை அபாயகரமான சூழ்நிலைக்கு தள்ளிவிடும்” என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அவர் #cancelboardexam2021 என்ற ஹேஷ்டேக்கையும் இணைத்துள்ளார்.
மேலும், “மாணவர்கள் சார்பாக நான் ஒரு கோரிக்கையை முன்வைக்கிறேன். பொதுத்தேர்வுகள் பள்ளிகளில் வைத்து நடத்த திட்டமிட்டுள்ளது. ஆனால் மாணவர்கள், இந்த நெருக்கடியான சூழ்நிலைகளில் தேர்வு எழுத தயாராக இல்லை என நினைக்கிறேன். இந்த இக்கட்டான சூழ்நிலையில் மாணவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். அப்போதுதான் அவர்களை பாதுகாக்க முடியும்” என்று பேசியுள்ளார்.
முன்னதாக, சிபிஎஸ்சி 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் மே 4 ஆம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு, அதற்கான கால அட்டவணை வெளியிடப்பட்டது. ஆனால் இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிவேகமாக பரவிவருவதால் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடம் இருந்து தேர்வுகளை ஆன்லைனில் நடத்த கோரிக்கை வைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.