கல்வி

“கட்டாந்தரையில் பாடமெடுக்க முடியாது”- எய்ம்ஸ் சேர்க்கை நிராகரித்தமைக்கு அமைச்சர் விளக்கம்

“கட்டாந்தரையில் பாடமெடுக்க முடியாது”- எய்ம்ஸ் சேர்க்கை நிராகரித்தமைக்கு அமைச்சர் விளக்கம்

நிவேதா ஜெகராஜா

நெல்லையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் கட்டிடம் இல்லாமல் கட்டாந்தரையில் கல்லூரியை இயங்கவைக்க அனுமதிக்க முடியாது” என தெரிவித்தார்.

தமிழகத்தில் கொரோனா 3- வது அலையில் இருந்து பொதுமக்களை பாதுகாத்துக்கொள்ளும் வகையில், கொரோனா தடுப்பூசி தமிழகம் முழுவதும் அனைத்துதரப்பு மக்களுக்கும் போடப்பட்டு வருகிறது. தடுப்பூசி போடுவதை அதிகப்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் இன்று நடைபெறுகிறது. அந்தவகையில் நெல்லை மாவட்டத்தில் சுமார் ஒரு லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி போடும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் 952 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. முகாம்களில், தடுப்பூசி போடும் பணிகள் காலை 7 மணி முதல் தொடங்கியுள்ளது. நெல்லை பாளையங்கோட்டை மனக்காவலம்பிள்ளை ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்து ஆய்வு செய்தார்.

இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “பொதுமக்கள் அனைவருக்கு தடுப்பூசி போடும் வகையில் இன்று தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த அடிப்படையில், 40,000 மையங்கள் செயல்படுகிறது. இம்மையங்களின் வழியாக 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட வேண்டுமென அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. ஒரே நாளில் தமிழகத்தில் அதிக பட்சமாக 6,12,000 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் 37,48,989 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர் . தற்போது நடக்கும் சிறப்பு முகாமின் காரணமாக இன்று மாலைக்குள் ஊசிபோட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியை எட்டும் என எதிர்ப்பார்க்கிறோம்.நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை 952 மையங்களில் தடுப்பூசி முகாம் நடக்கிறது. மாவட்டத்தில் 58,608 பேருக்கு ஊசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 62,650 மருந்துகள் அனுப்பப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தின் எல்லையை ஒட்டிய தென்காசி , கன்னியாகுமரி, கோவை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் 100 சதவீதம் ஊசி தடுப்பூசி செலுத்த வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அங்கும் கூடுதல் கவனம் செலுத்தவுள்ளோம்.

புதிது புதிதாக வரும் கொரோனாவை கண்டறிந்து கட்டுப்படுத்த, மரபணு ஆய்வகங்கள் நமக்கு தேவைப்படுகிறது. இந்தியாவில் மரபணு ஆய்வகம் 23 உள்ளது. தற்போது இதிலொன்றை தமிழக அரசே நிறுவி ஏற்று நடத்துகிறது. தமிழகத்தில் டெல்டா பிளஸ் வைரஸ் 10 பேருக்கு கண்டறியப்பட்டு அதில் ஒருவர் இறந்துவிட்டார் . மீதம் 9 பேர் நலமாக உள்ளனர். இதுபோன்ற வைரஸை கண்டறிய பெங்களுர் அனுப்பி 3 மாதகாலம் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. ஒரு பரிசோதனைக்கு ரூ.4,000 வரை செலவாகிறது. எனவே இந்த ஆய்வகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, அதற்கான பட்ஜெட்டிலும் அறிவித்திருந்தார். அந்தவகையில் இந்தியாவிலேயே முதன் முறையாக மாநில அரசின் நிர்வாகத்தில் செயல்படும் மரபணு ஆய்வகம் சென்னையில் 4 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை நாளை மறுநாள் முதல்வர் திறந்து வைக்கிறார்” என்றார்.

இதற்கிடையே சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கூளையூரை சேர்ந்த சிவக்குமார் என்ற விவசாயியின் இரண்டாவது மகன் தனுஷ் (வயது 19), நீட் தேர்வுக்கு அஞ்சி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இன்று காலை நடந்தேறியிருந்தது. மாணவர் தனுஷ், மேட்டூரில் உள்ள தனியார் பள்ளியில் 2019-ம் ஆண்டு +2 முடித்திருக்கிறார். பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்திருந்தார். மருத்துவராக வேண்டும் என்ற கனவில் இருந்த அவர் இரண்டு முறை நீட் தேர்வு எழுதியுள்ளார். இரண்டு முறையும் நீட் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. இன்று மூன்றாவது முறையாக நீட் தேர்வு எழுதுவதற்காக தயாராகி வந்தார். மூன்றாவது முறையும் தேர்ச்சி பெறாவிட்டால் தனது மருத்துவர் கனவு கலைந்து போகும் என்ற பயத்தில், இன்று அதிகாலையில் அவர் தூக்கிட்டுக்கொண்டிருக்கிறார். மாணவரின் இறப்பு, மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியிருப்பதை தொடர்ந்து, “மாணவ-மாணவிகள் தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொள்வது சரியான முடிவாக இருக்காது” என்று கூறினார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

மாணவர் தனுஷ் குறித்து அவர் பேசுகையில், “தமிழக அரசின் நீட் எதிர்ப்புக்கான சிறப்பு தீர்மானம் சட்டமன்றத்தில் நாளை நிறைவேற்றப்பட இருக்கிறது. தொடர்ந்து நீட்டில் இருந்து விலக்கு பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு செய்து வருகிறது” என்றார்.

பின்னர் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் ஏன் மாணவர்களை தமிழக அரசு இந்த ஆண்டில் சேர்க்கவில்லை என்ற பாஜக-வினர் கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார். அப்போது பேசிய அவர், “எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் ஏதும் துவங்காத நிலையில் 150 மாணவர்களை சேர்த்துக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அவர்களை வெறும் காம்பவுண்டு சுவரை மட்டும் வைத்துக்கொண்டு கட்டாந்தரையில் அமரவைத்து கல்லூரியை தொடங்க எங்களால் அனுமதிக்க முடியாது. மதுரை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அந்த மாணவர்களை படிக்க வைக்க வாய்ப்பு இல்லை. ஏனெனில் ஏற்கனவே அங்கு 250 மாணவர்கள் உள்ளனர்.

அதேபோல கலைக் கல்லூரிகளில் மருத்துவ மாணவர்களை படிக்க வைப்பது என்பதும் சரியானதாக இருக்காது. இதையெல்லாம் தெளிவாக விளக்கி, ‘தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எய்ம்ஸ் மாணவர் சேர்க்கை நடத்துவதும், ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் அவர்களை சேர்ப்பதும் சரியான முடிவாக இருக்காது’ என மத்திய அரசுக்கு தமிழக அரசின் சார்பில் பதில் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் அருகில் உள்ள மற்ற மருத்துவ கல்லூரிகளில் பிரித்து மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி கேட்கப்பட்டுள்ளது. அதற்கான அனுமதி கிடைத்தால் தமிழக அரசு மாணவர் சேர்க்கைக்கு தயாராக உள்ளது” என தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து அமைச்சர் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டுவரும் கொரோனா கட்டுப்பாட்டு மையத்தை பார்வையிட்டார். தொடர்ந்து சீதப்பற்பநல்லூர் கொரோனா தடுப்பூசி முகாமினைத் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம், சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப், முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் ஆவுடையப்பன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எல்.எஸ்.லட்சுமணன், தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் செல்லத்துரை உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

- நெல்லை நாகராஜன்.