கல்வி

புத்தக வாசிப்பு திருவிழா: புதுக்கோட்டையில் 50,000 மாணவர்கள் பங்கேற்பு

webteam

புதுக்கோட்டையில் நடைபெற்ற புத்தக வாசிப்பு திருவிழாவில் சுமார் 50,000 மாணவர்கள் பங்கேற்றனர்.

புதுக்கோட்டையில் வருகின்ற 24ம் தேதி தொடங்க உள்ள புத்தக திருவிழாவை முன்னிட்டு மாணவர்களுக்கு புத்தகங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இன்று நடைபெற்ற வாசிப்பு திருவிழாவில் 50,000 மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

புதுக்கோட்டை நகர்மன்றத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் இரண்டாம் ஆண்டு புத்தக திருவிழா வருகின்ற 24 ம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 3ம் தேதி வரையில் நடைபெற உள்ளது. இந்தப் புத்தக திருவிழாவை மாணவர்களுக்கு தெரியபடுத்தும் வகையிலும், புத்தகங்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் பயன்பாடுகளை மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையிலும் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இன்று மூன்றாம் பாடவேலையில் வாசிப்பு திருவிழா நடைபெற்றது. புதுக்கோட்டை அரசு ராணியர் மகளிர் பள்ளியில் நடந்த விழாவை மாவட்ட ஆட்சியர் கணேஷ் தொடங்கிவைத்து புத்தகங்கள் வாசிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து மாணவர்களிடம் விளக்கினார். மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஒரே நேரத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் புத்தகங்களை வாசித்து மகிழ்ந்தனர். மேலும் புத்தகங்கள் படிப்பதால் கல்வியோடு சேர்ந்து அறிவியல் வளர்ச்சியும் தங்களுக்கு ஏற்படுவதாகவும் பள்ளிக்கூடத்தில் தாங்கள் அறியமுடியாத பல நல்ல பண்புகளை புத்தகங்கள் தங்களுக்கு கற்று தருவதாகவும் இந்த ஆண்டு நடைபெற உள்ள புத்தக கண்காட்சியில் அதிகஅளவிலான மாணவர்கள் கலந்து கொள்ள உள்ளதாகவும் கூறினர்.

புத்தககண்காட்சி குறித்து அதன் அமைப்பாளர்கள் கூறுகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஆண்டுதான் முதல் முறையாக புத்தக கண்காட்சி நடத்தபட்டது என்றும் இந்த ஆண்டு தொடங்கும் புத்தக கண்காட்சிக்காக 42 அரங்குகள் அமைக்கபட்டு லட்சக்கணக்காண புத்தகங்கள் காட்சிபடுத்தபட உள்ளன. இதனை மாணவர்களுக்கு தெரியபடுத்தும் வகையில் தான் இன்று வாசிப்பு திருவிழா நடைபெற்றது என்றும் கூறினார். மேலும் மாணவர்கள் சேமிப்பின் மூலம் புத்தகங்களுக்காக ஏற்கனவே உண்டியல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் இந்த ஆண்டு 25,000 மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவர்கள் புத்தக திருவிழாவை காண வருவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் கண்காட்சி அமைப்பாளர்கள் கூறினர்.