2 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு திருப்பூரில் புத்தக திருவிழா நடைபெற உள்ளது. வரும் 14 ஆம் தேதி துவங்கி 24 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த புத்தக திருவிழாவில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்கு வர உள்ளன.
திருப்பூர் பின்னல் புக் ட்ரஸ்ட் - சென்னை பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்தும் 18 வது திருப்பூர் புத்தக திருவிழா, மங்கலம் சாலை கே.ஆர்.சி சிட்டி செண்டர் வளாகத்தில் வரும் 14 ஆம் தேதி தொடங்கி 24 ஆம் தேதி வரை 11 நாட்களுக்கு நடைபெற உள்ளது. கொரோனா கால கட்டுப்பாடுகளால் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த நிலையில், இந்த வருடம் மொத்தம் 95 அரங்குகளுடன் புத்தக திருவிழா நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியில் சாகித்ய அகாடமி, பாரதி, உயிர்மை, கிழக்கு பதிப்பகம், நற்றிணை, ஆழ்வார்கள் ஆய்வு மையம் உள்ளிட்ட 36 புத்தக பதிப்பகங்கள் மற்றும் விற்பனை நிலையங்கள் என 94 நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
கதை, கவிதை, நாவல், நாடகம், அறிவியல், அரசியல், இலக்கியம், ஆன்மீகம் என பல்வேறு தலைப்புகளில் லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளன. மேலும், புத்தகங்கள் வாங்கும் அனைவருக்கும் 10% தள்ளுபடி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தினமும் பிற்பகம் 3 மணிக்கு தொடங்கும் இந்த புத்தக கண்காட்சி , விடுமுறை நாட்களில் காலை 11 மணிக்கே துவங்கி இரவு 9 மணி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புத்தக கண்காட்சிக்கு வரும் நபர்களுக்கு சிந்தனையை தூண்டும் வகையில் ஒவ்வொரு நாள் மாலை நேரமும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி 15 ஆம் தேதி புதிய தலைமுறை தொலைக்காட்சி சார்பில் வட்டமேசை விவாத அரங்கமும் , அடுத்தடுத்த நாட்களில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், கம்பம் செல்வேந்திரன், சிறார் எழுத்தாளர் உமாநாத் விழியன், கவி வெற்றிச்செல்வி, பவா.செல்லதுரை, ஜி.பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ், ஊடகவியலாளர் ஜென்ராம் ஆகியோர்களின் சொற்பொழிவு நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.
ஒவ்வொரு நாளும் கண்காட்சியில் பங்கேற்கும் மாணவ மாணவிகளில் குலுக்கல் அடிப்படையில் தலா 10 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.500 மதிப்புள்ள புத்தகங்கள் என்ற அடிப்படையில் நாளொன்றுக்கு ரூ.5000 மதிப்புள்ள புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை 50 ஆயிரம் பார்வையாளர்களுடம் 2 கோடி அளவிற்கு புத்தகங்கள் விற்பனை ஆன நிலையில் இந்த முறை கூடுதலாக வரவேற்பு இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர் திருப்பூர் புத்தக திருவிழா ஏற்பாட்டு குழுவினர்.