கல்வி

முறைகேடு புகார்: பீகார் பிளஸ் டூ தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர் கைது

webteam

பீகார் மாநில பள்ளிக்கல்வித் துறையின் கலைப் பிரிவு பாடத்தில் மாநிலத்திலேயே முதலிடம் பிடித்த கணேஷ் குமாரை, முறைகேடு புகாரில் போலீசார் கைது செய்தனர். 

கலைப்பிரிவு பாடத்தில் முதலிடம் பிடித்த மாணவர் கணேஷ் குமாருக்கு இசை உள்ளிட்ட அவர் முதலிடம் பிடித்த பல்வேறு பாடப்பிரிவுகளில் அடிப்படை கேள்விக்கே பதில் தெரியாதது குறித்த வீடியோ காட்சிகள் ஊடகங்களில் வெளியானது. இதையடுத்து, அவரது தேர்வு முடிவுகளை உடனடியாக ரத்து செய்வதாக பீகார் மாநில பள்ளிக் கல்வித் துறை அறிவித்தது. மேலும், கணேஷ் குமார் மற்றும் அவர் பயின்ற பள்ளி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில கல்வித் துறை தலைவர் ஆனந்த் கிஷோர் தெரிவித்தார். 

சமீபத்தில் வெளியான பீகார் பிளஸ் டூ தேர்வு முடிவுகளில் 65 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெறவில்லை. கலைப்பிரிவு பாடத்தில் சமஸ்திபூர் மாவட்டத்தில் உள்ள சக்காபிப் கிராமத்தைச் சேர்ந்த கணேஷ் குமார் என்ற மாணவர் 82.6 சதவீத மதிப்பெண்களுடன் மாநிலத்திலேயே முதலிடம் பிடித்தார். குறிப்பாக இசைப் பாடத்தின் செய்முறைத் தேர்வில் மொத்தமுள்ள 70 மதிப்பெண்களுக்கு 65 மதிப்பெண்களும், எழுத்துத் தேர்வில் 30க்கு 18 மதிப்பெண்களும் அவர் பெற்றார். சமீபத்தில் கணேஷ்குமாரை பேட்டிகண்ட தொலைக்காட்சி ஒன்று, இசை குறித்த அடிப்படை கேள்விகளைக் கேட்க, அவற்றுக்கு பதிலளிக்க முடியாமல் திணறியதையும் ஒளிபரப்பியது. கடந்தாண்டும் இதேபோல பீகார் பிளஸ் டூ தேர்வில் முதலிடம் பிடித்தவருக்கு அடிப்படை கேள்விகளுக்கே விடைதெரியாதது ஊடகங்கள் மூலமாக வெளிச்சத்துக்கு வந்தது.