கல்வி

போராட்டம் எதிரொலி: பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வுக் கட்டண உயர்வு தற்காலிக நிறுத்தம்

போராட்டம் எதிரொலி: பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வுக் கட்டண உயர்வு தற்காலிக நிறுத்தம்

Sinekadhara

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று மாணவர்களுக்கான தேர்வுக் கட்டணம் உயர்த்தப்படுவதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் செல்வம் அறிவித்துள்ளார். 

பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு கீழ் திருச்சி, தஞ்சை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் 142 கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 3.5 லட்சம் மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். அரசு கல்லூரி மற்றும் பாரதிதாசன் உறுப்புக் கல்லூரிகளில் படிக்கக்கூடிய மாணவ, மாணவிகள் விவசாய மற்றும் ஏழை எளிய குடும்பத்தில் இருந்து வந்தவர்கள். இந்நிலையில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் தற்காலிக பட்ட சான்று, மதிப்பெண் சான்று உள்ளிட்ட 27 வகையான கட்டணங்களை கடந்த இருபத்தி எட்டாம் தேதி உயர்த்தி அறிவித்துள்ளது. இதற்கான சர்க்குலர் கல்லூரிகளுக்கு 4ஆம் தேதி அனுப்பப்பட்டுள்ள நிலையில் திடீர் கட்டண உயர்வால் மாணவர்கள் தேர்வு எழுதமுடியாத நிலை ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறி திருவாரூர் மற்றும் தஞ்சை மாவட்டங்களில் கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்காலிக பட்ட சான்று 200 ரூபாயிலிருந்து 1000 ரூபாயாகவும், டிகிரி சர்டிபிகேட் 800 ரூபாயிலிருந்து 1500 ரூபாயாகவும் அதே ஓராண்டு முடிந்தால் 2,000 ரூபாயாக செலுத்த வேண்டும் எனவும் உயர்த்தி அறிவிக்கப்பட்டது. அதேபோல் ஒரு பேப்பர் தேர்வுக் கட்டணம் 75 ரூபாயிலிருந்து 125 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. வருகை குறைவாக இருந்தால் செலுத்தவேண்டிய கட்டணம் 500 லிருந்து 1500 ரூபாயாகவும், மதிப்பெண் பட்டியல் கொடுப்பதற்கு 200 ரூபாயிலிருந்து 1500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக நிர்வாக செலவின் காரணமாக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக கல்லூரி நிர்வாகங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் தற்போது எந்தவித முன்னறிவிப்புமின்றி இரண்டு மடங்கு முதல் ஐந்து மடங்கு வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது மாணவர்களிடையே கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. பாரதிதாசன் பல்கலைக்கழகம் திடீரென அறிவித்துள்ள கட்டண உயர்வு ஏழை எளிய மாணவர்களின் கல்வியை பாதிக்கும் என்பதால் அதை உடனே திரும்ப பெறவேண்டும் என மாணவர்கள், பேராசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்றுக்கொண்ட பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் செல்வம், தேர்வுக் கட்டணம் உயர்த்தப்படுவதை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக அறிவித்துள்ளார்.