பாரதியார் பல்கலைக்கழகம் கோப்புப்படம்
கல்வி

நிலையான பொறுப்பாளர்கள் இல்லாததால் நிர்வாகத்தில் தள்ளாடும் பாரதியார் பல்கலைக்கழகம்! நடப்பது என்ன?

PT WEB

செய்தியாளர் - ஐஸ்வர்யா

கோவை மருதமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது பாரதியார் பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழகத்தின் கீழ் சுமார் 130 கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. மாநில அளவில் முக்கியமான இந்த பல்கலைக்கழகத்தில், கடந்த 2 ஆண்டுகளாக துணைவேந்தர் இல்லை. இதனால் இப்பல்கலைக்கழகம் கடும் நிர்வாக சிக்கல்களை சந்தித்து வருகிறது.

பாரதியார் பல்கலைக்கழகம்

துணைவேந்தர் மட்டுமின்றி 7 ஆண்டுகளாக பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், தொலைதுார கல்வி மைய இயக்குனர், கல்லுாரி கவுன்சில் இயக்குனர் உள்ளிட்ட அனைத்து முக்கிய பதவிகளும் ஆண்டுக்கணக்கில் இப்பல்கலைக்கழகத்தில் காலியாகவே உள்ளன. இதனால் நிதி ஒதுக்கீடுகளில் முறைகேடு, நீதிமன்ற வழக்குகள் நிலுவை, தணிக்கை தடை அதிகரிப்பு என அடுக்கடுக்காக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில், தற்பொழுது பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பொறுப்புக்குழு மற்றும் பொறுப்பு பதிவாளர் ஆகியோரிடையே ஏற்பட்டுள்ள அதிகார மோதல் காரணமாக ஆயிரக்கணக்கான கோப்புகள் எந்த நடவடிக்கையுமின்றி தேங்கியிருக்கிறது. இதனால் பல்கலைக்கழக நிர்வாகம் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும், பல்கலைக்கழகம் நிர்வாக சீர்கேட்டினால் படுபாதாளத்தை நோக்கி சென்று கொண்டுள்ளதாகவும் பல்கலைக்கழக அலுவலர்கள் சங்கத்தினர் தொடர் போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர்.

பாரதியார் பல்கலைக்கழகம்

“இந்நிலை மாற போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்கலைக்கழகத்தின் தற்போதுள்ள அவல நிலைமையை சுட்டிக் காட்டிடவும், அதனை சரிசெய்திடவும் தமிழக ஆளுநர், தமிழ்நாடு முதல்வர், உயர்கல்விதுறை அமைச்சர் மற்றும் உயர்கல்விதுறை முதன்மை செயலாளர் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் கவனத்திற்கு இதையெல்லாம் கொண்டு செல்ல வருகிற 15 ஆம் தேதி முதல் தொடர் போராட்டங்கள் நடத்த முடிவெடுத்துள்ளோம்” என்கின்றனர் பல்கலைக்கழக அலுவலர்கள் சங்கத்தினர்.

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் மட்டும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், அலுவலர்கள் பணியாற்றி வரும் இடத்தில் உள்ள பல்கலைக்கழக உணவகம் கடந்த 6 மாதங்களாக செயல்படாமல் உள்ளது. நிர்வாகம் எவ்வளவு முடங்கி உள்ளது என்பதற்கு இது சிறு உதாரணமாக சொல்லப்படுகிறது. மொத்தம் 482 அலுவலர்கள் பணியிடங்களில் காலியாக உள்ள 350 இடங்கள்  இன்னும் நிரப்பப்படாமல் உள்ளது.

பாரதியார் பல்கலைக்கழகம்

பல்கலைக்கழக சிண்டிகேட் குழு உறுப்பினர் வீரமணி கூறுகையில், “துணைவேந்தர் இல்லாததால், பல்கலைக்கழகம் சார்ந்த முக்கிய முடிவுகள் எடுக்கும் செனட் குழு கூட்டம் நடக்காமல் முற்றிலும் முடங்கியுள்ளது. நிர்வாகம் மட்டுமின்றி மாணவர்களும் பாதிக்கப்படும் சூழலும் ஏற்பட்டுள்ளது.

நடந்து முடிந்த தேர்வின் முடிவுகள் இன்னும் வெளிவராததே இதற்கு எடுத்துக்காட்டு. பல்கலைக்கழகம் சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் பாடத்திட்டங்கள் வழங்கப்படாததால் பழைய பாடங்களிலேயே கற்பிக்கப்பட்டு வருகிறது” என்றார்.

பாரதியார் பல்கலைக்கழகம்

தன்னிச்சையான பணியிட மாற்றம் முடிவுகள், பல்கலைக்கழக குழு கூட்டம், மாணவர்களுக்கான பாடத்திட்டங்கள், காலி பணியிடங்கள், வேலை பழு உள்ளிட்ட நிர்வாக சிக்கல்கள் தொடர்பாக விளக்கம் பெற பல்கலைக்கழக பதிவாளர் பொறுப்பு அவர்களை தொடர்புகொண்டும் முயலவில்லை.

இதற்கிடையே, அலுவலர்கள் சங்கம் போராட்டம், சிண்டிகேட் குழு உறுப்பினர்களின் புகார்கள் தொடர்பாக பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளர் ரூபா குணாசீலன் புதிய தலைமுறைக்கு விளக்கம் அளித்தார். அதில், “பல்கலைக்கழக துணைவேந்தர் பொறுப்பு குழுவில் 3 பேர் உள்ளதால் கோப்புகள் உள்ளிட்ட முடிவுகள் எடுப்பதற்கு சில கால தாமதமாகிறது. அலுவலர்கள் பிரதான குற்றச்சாட்டான பணியிட மாற்றம் என்பது தான், இணை, துணை பதிவாளர்கள் உட்பட 10 பேர் கொண்ட குழு அமைத்து ஒரே பதவியில் 5 முதல் 7 ஆண்டுகளுக்கு மேல் உள்ளவர்களை பணி சுற்று தான் மேற்கொள்ளப்படுகிறது. நியாயமான முறையில் நடைபெறுகிறது” என்று தெரிவித்தார்.

மேலும், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உள்ளிட்ட முக்கிய பணியிடங்களை விரைவாக நியமனம் செய்ய கோரி துணைவேந்தர் பொறுப்பு குழுவுக்கு கடிதம் எழுதியுள்ளதாக கூறியவர், துணைவேந்தர் உள்ளிட்ட பொறுப்புகள் காலியாக உள்ள நிலையில், பல்கலைக்கழக நலன் சார்ந்தே சில மாற்றங்களை ஏற்று ஒத்துழைப்பு தருவதே பல்கலைக்கழகத்திற்கு செய்யும் கடமை என்றும், துணைவேந்தர் பொறுப்பு குழுவில் உள்ள ஒருவர் தன்னிச்சையாக நடந்தாலும் அது பல்கலைக்கழகத்தை பாதிக்கும் என்றும் சுட்டிக்காட்டினார்.

பொறுப்பு பதிவாளர் ரூபா குணாசீலன்

அத்துடன், உயர்கல்வி துறை செயலர் வழிகாட்டுதலில், பல்கலைக்கழக தேர்வு முடிவுகள், கல்லூரிகளுக்கான பாடத்திட்டங்கள் ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் என்றவர், முக்கியமான பல்கலைக்கழக உணவகம் விரைவில் திறக்க ஒப்பந்தம் கோரப்படுவதுடன், ஆவின் திறக்கவும், ஒப்பம் முடிந்த பல்கலைக்கழகத்தில் உள்ள மருந்தக பராமரிப்பை புதுப்பித்து, தகுதியான மருத்துவர்கள் நியமனம் செய்யவும் திட்டமிட்டு உள்ளதாக தெரிவித்தார்.