கல்வி

பள்ளிகளில் பாலியல் வன்கொடுமைகள் குறித்த விழிப்புணர்வு - என்.சி.இ.ஆர்.டி உத்தரவு

பள்ளிகளில் பாலியல் வன்கொடுமைகள் குறித்த விழிப்புணர்வு - என்.சி.இ.ஆர்.டி உத்தரவு

webteam

பள்ளிகளில் மாணவர்களிடையே பாலியல் வன்கொடுமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பாடத்திட்டங்களில் வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்த என்.சி.இ.ஆர்.டி உத்தரவிட்டுள்ளது. 

கடந்த சில தினங்களாகவே குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் பள்ளிகளில் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு பாலியல் தொல்லைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு உத்தரவை என்.சி.இ.ஆர்.டி.  பிறப்பித்துள்ளது. 

மாணவர்களுக்கு 'நல்ல தொடுதல்' மற்றும் 'கெட்ட தொடுதல்' ஆகியவற்றுக்கு இடையேயான வித்தியாசத்தை கற்றுக்கொடுக்கும் வகையில், பாடப்புத்தகங்களில் சில வழிகாட்டுதல்கள் அறிமுகப்படுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என என்.சி.இ.ஆர்.டி. தெரிவித்துள்ளது. மேலும், மாணவர்கள் பாலியல் வன்கொடுமை சம்பவங்களை சந்திக்க நேரிட்டால் அவற்றில் இருந்து எப்படி தங்களை பாதுகாத்து கொள்வது என்பது குறித்தும், இது தொடர்பாக புகார் அளிக்கவும், ஆலோசனைகளை பெற தொலைபேசி எண்களும் இடம்பெற வேண்டும் என என்.சி.இ.ஆர்.டி. தெரிவித்துள்ளது. இதுபோன்ற பாடத்திட்டங்கள் மூலம் இனி வரும் காலங்களில் பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடும் நபர்களிடம் இருந்து மாணவர்கள் தங்களை எளிதில் காத்துக்கொள்ளும் வாய்ப்பு அதிகரிக்கும் ​எனவும் என்.சி.இ.ஆர்.டி தெரிவித்துள்ளது.