கல்வி

இராணுவத்தில் சேர விருப்பமா ? இது உங்களுக்கான செய்தி

இராணுவத்தில் சேர விருப்பமா ? இது உங்களுக்கான செய்தி

webteam

இந்திய ராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு முகாம் வருகின்ற ஆகஸ்ட்  மாதம் 22 ஆம் தேதி முதல் செப்டம்பர் மாதம் இரண்டாம் தேதிவரை சேலத்தில் நடைபெறவுள்ளது. சேலம், கோவை. மதுரை உள்ளிட்ட பதினோரு மாவட்டங்களை சேர்ந்த ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் ரோஹிணி தெரிவித்துள்ளார். இந்திய ராணுவத்தில் சோல்ஜர் டெக்னிக்கல், சோல்ஜர் டெக்னிக்கல் அம்யுநிசன், நர்சிங் உதவியாளர், ஸ்டோர் கீப்பர் உள்ளிட்ட ஆறு பிரிவுகளுக்கான ஆட்சேர்ப்பு முகாம் சேலத்தில் நடைபெறவுள்ளது. இது தொடர்பாக கோவை மண்டல ராணுவ ஆட்சேர்ப்பு இயக்குனர் ரேணி முன்னிலையில் சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் ரோஹிணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், சேலத்தில் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி முதல் செப்டம்பர் மாதம் இரண்டாம் தேதி வரை இந்திய ராணுவத்திற்கான ஆட்சேர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது என்றும், சேலம், கோவை, மதுரை, தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல். ஈரோடு, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல் மற்றும் தேனி உள்ளிட்ட பதினோரு மாவட்டங்களை சேர்ந்த தகுதியுடைய நபர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் தகவல் தெரிவித்தார்.

அறிவிக்கப்பட்ட பணிகளில் சேர விரும்புவோர் வரும் ஜூலை மாதம் 8-ம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 6- தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்த மாவட்ட ஆட்சிதலைவர் ரோஹிணி, விருப்பமுள்ள நபர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்தார். இதேபோன்று ஆட்சேர்ப்பு முகாமிற்கு வரும் விண்ணப்பதாரர்கள் தங்களது அனுமதி சீட்டினை கட்டாயம் கொண்டு வரவேண்டும் என்றும் அனுமதி சீட்டுகளை ஆகஸ்ட் மாதம் பத்தாம் தேதிக்கு பிறகு  www.joinindianarmy.nic.in  என்ற இணையதள முகவரியிலேயே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சேலத்தில் நடைபெறும் ராணுவ ஆட்சேர்ப்பு முகாமிற்காக மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் அனைத்து விதமான அடிப்படை வசதிகள் செய்துகொடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சிதலைவர் ரோஹிணி தெரிவித்தார். மேலும், விண்ணப்பதாரர்கள் தங்களுடைய சந்தேகங்களை ஆர்மி காலிங் (ARMY CALLING) என்ற கையடக்க செயலியினை கூகுள் பிளேஸ்டோர் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது 0422-2222022 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.