கல்வி

தற்காலிக ஆசிரியர் நியமனம்: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல்கள்

தற்காலிக ஆசிரியர் நியமனம்: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல்கள்

ச. முத்துகிருஷ்ணன்

தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பான பணிகளை வேகப்படுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், டிஆர்பி நடத்திய சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றவர்களை மட்டுமே தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு செய்ய வேண்டும் என்றும் அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் வரும் 15-ம் தேதிக்குள் தகுதியானவர்களை தேர்வு செய்ய வேண்டும் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 2022-23ம் கல்வியாண்டில் காலியாகவுள்ள இடைநிலை /பட்டதாரி / முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனம் சார்பாக சென்னை உயர்நீதிமன்ற வழக்கு மீது உயர்நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட இடைக்கால ஆணையின் அடிப்படையில் திருந்திய வழிகாட்டு நெறிமுறைகள் (Revised Guidelines) வழங்கியுள்ளது.

இவ்வகையில் சென்னை உயர்நீதிமன்ற ஆளுகைக்குட்பட்ட 24 மாவட்டங்களில் மட்டும் (சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு ஆளுகைக்குட்பட்ட 14 மாவட்டங்கள் நீங்கலாக) தற்காலிக ஆசிரியர் நியமனம் சார்ந்து விண்ணப்பதாரர்களிடமிருந்து மாவட்டக் கல்வி அலுவலகங்களில் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற வழக்கின் இடைக்கால ஆணை அடிப்படையில் தற்காலிக ஆசிரியர் நியமனம் சார்ந்து பெறப்பட்டுள்ள விண்ணப்பங்களை கீழ்க்காணும் அறிவுரைகளை பின்பற்றியும், காலஅட்டவணைப்படி பணிகளை மேற்கொள்ளுமாறும் தொடர்புடைய முதன்மைக் கல்வி அலுவலர்களை பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது..!

1) தற்காலிக ஆசிரியர் நியமனம் சார்ந்து சென்னை உயர்நீதிமன்ற இடைக்கால ஆணையின்படி இடைநிலை ஆசிரியர் / பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களையும், முதுகலை ஆசிரியர் பதவிக்கு முதுகலை ஆசிரியர் தெரிவுக்கான ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட தேர்வுகளில் பங்கேற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கொண்டவர்களையும் மட்டுமே தற்காலிக நியமனம் செய்யத்தக்க வகையில் விண்ணப்பங்கள் கலந்து பரிசீலினைக்கு எடுத்துக் கொள்ளப்படவேண்டும்.

2) தற்காலிக ஆசிரியர் நியமனம் சார்ந்து ஜூலை 1 அன்று வெளியிடப்பட்ட செயல்முறைகளில் பத்தி எண்.3ல் வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதிகளுடன் ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களுள் ஒரு காலிப்பணியிடத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்டவர் விண்ணப்பம் செய்திருப்பின் பத்தி 4ல் தெரிவிக்கப்பட்டுள்ள முன்னுரிமையின் அடிப்படையில் நியமனம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

3) மேற்சொன்ன நடவடிக்கைகள் கீழ்க்காணும் காலஅட்டவணைப்படி மேற்கொள்ளப்படவேண்டும் எனவும் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை வலியுறுத்தியுள்ளது..!

(i) மாவட்டக் கல்வி அலுவலகங்களில் பெறப்பட்டுள்ள விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டிய நாள் - 12.07.2022 மற்றும் 13.07.2022

(ii) மாவட்டக் கல்வி அலுவலர்களிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களை ஜூலை 1 அன்று வெளியான செயல்முறைகளில் பத்தி 5ல் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளின்படி தேர்வு குழு பரிசீலித்து தகுதியான நபரை இறுதி செய்ய வேண்டிய நாட்கள் - 14.07.2022 மற்றும் 15.07.2022

(iii)தேர்வுக்குழுவால் தெரிவு செய்யப்பட்ட தகுதியான நபர் குறித்த பட்டியலை முதன்மைக் கல்வி அலுவலரிடம் தலைமையாசிரியர் சமர்ப்பிக்க வேண்டிய நாள் - 16.07.2022

(iv) தேர்வுக்குழுவால் தெரிவு செய்யப்பட்ட பட்டியலை கூர்ந்தாய்வு செய்து முதன்மைக் கல்வி அலுவலர் ஏற்பளிக்க வேண்டிய நாள் - 18.07.2022

(v) முதன்மைக் கல்வி அலுவலரால் ஏற்பளிக்கப்பட்ட தற்காலிக நியமனத்திற்கு பள்ளி மேலாண்மைக் குழுவின் ஒப்புதல் பெறப்பட வேண்டியநாள் - 19.07.2022

(vi) தற்காலிக நியமனம் பெற்றவர் பணியில் சேர்க்கப்படவேண்டிய நாள் - 20.07.2022

இந்த அறிவுரைகளை சிறிதும் வழுவாமல் பின்பற்றி/ எவ்வித புகாருக்குமிடமின்றி செயல்படுமாறு சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களை அறிவுறுத்தி உள்ளது பள்ளிக்கல்வித்துறை . தொடக்கக் கல்வித் துறையில் தற்காலிக இடைநிலை ஆசிரியர் நியமனம் குறித்து தொடக்கக் கல்வி இயக்குநரால் தனியே அறிவுரைகள் வழங்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.