தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதால் அனைத்து பொதுத் தேர்வுகளையும் ஒரு மாதத்திற்குள் முடிக்க தமிழக பள்ளிக் கல்வித்துறை ஏற்கனவே திட்டமிட்டிருந்தது. திட்டமிட்டபடியே பன்னிரெண்டாம் வகுப்புக்கான பொதுத் தேர்வு மார்ச் - 1 ஆம் தேதி தொடங்கி மார்ச் - 19 இல் முடிவடைந்தது. அதே போல் பதினென்றாம் வகுப்புக்கான பொதுத் தேர்வானது மார்ச்- 6 ஆம் தேதி தொடங்கி மார்ச்-22 இல் முடிவு பெற்றது. அதனை தொடர்ந்து பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வானதும், மார்ச்-14 இல் தொடங்கி மார்ச்-29 அதாவது நேற்றுடன் நிறைவடைந்தது.
எந்தவொரு பிரச்னையும் இன்றி பொதுத் தேர்வுகள் அனைத்தும் இனிதே நிறைவு பெற்றதையடுத்து, இந்த தேர்வுகளுக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெறும் எனவும் தேர்வு முடிவுகளுக்கான தேதிகளையும் தமிழக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதில் பிளஸ்-டூ வகுப்பிற்கு நேற்று முதல் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியுள்ளது. அதில் பன்னிரெண்டாம் வகுப்புக்கான பொதுத் தேர்வு முடிவுகள் வருகின்ற ஏப்ரல்-19 ஆம் தேதியும், பதினென்றாம் வகுப்புக்கான பொதுத் தேர்வு முடிவுகள் மே மாதம் 8ஆம் தேதியும், பத்தாம் வகுப்புக்கான பொதுத் தேர்வு முடிவுகள் ஏப்ரல்-29 ஆம் தேதியும் வெளியாக உள்ளதாகவும் தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
அனைத்து பொதுத் தேர்வுகளிலும் வினாத்தாள்கள் சற்று கடினமாக இருந்ததாகவே மாணவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். எனினும் ஒரு வழியாக அனைத்து பொதுத் தேர்வுகளும், நேற்றுடன் நிறைவடைந்ததால் மாணவ, மாணவிகள் அல்லாது பெற்றோர்களும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இனி பிளஸ்-டூ மாணவர்கள் தங்களது கல்லூரி படிப்பிற்காக முயற்சி மேற்கொள்ள வேண்டியதுதான்.