கல்வி

இந்தியாவில் உயர் கல்வி நிலை: பி.காம் படிப்பில் மாணவிகளின் சேர்க்கை விகிதம் உயர்வு

இந்தியாவில் உயர் கல்வி நிலை: பி.காம் படிப்பில் மாணவிகளின் சேர்க்கை விகிதம் உயர்வு

நிவேதா ஜெகராஜா

உயர் கல்வியில் மாணவர்களின் சேர்க்கை நிலைமை குறித்த ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. இதில், 'பி.காம் படிப்பில் மாணவிகளின் சேர்க்கை விகிதம் உயர்வு' என்பன உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளன.

இளங்கலை வணிகவியல் (பி.காம்) படிப்பில் முதல்முறையாக மாணவர்களுக்கு நிகராக மாணவிகள் சேர்க்கையும் அதிகமாக உள்ளது என உயர்கல்வி குறித்த அகில இந்திய ஆய்வு (AISHE) அமைப்பு வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை, ஒவ்வொரு 100 மாணவர்களுக்கு 90 மாணவிகள் என்ற விகிதமே பி.காம் படிப்பில் சேர்க்கை இருந்தது. ஆனால், 2019-20 ஆம் ஆண்டில் இந்த சேர்க்கை விகிதம் ஒவ்வொரு 100 மாணவர்களுக்கு 100 மாணவிகள் என உயர்ந்துள்ளது. மொத்தமாக 2019-20 ஆம் ஆண்டில், பி.காம் படிப்பில் 41.6 லட்சம் பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் 20.3 லட்சம் பேர் மாணவிகள், 21.3 லட்சம் மாணவர்கள்.

குறிப்பாக, 2017-18ம் ஆண்டுக்கு பிறகு பெண்கள் இளங்கலை அறிவியல் மற்றும் மருத்துவ படிப்புகளில் சேருவதில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளனர். 2017-18 ஆம் ஆண்டில், பி.எஸ்சியில் ஒவ்வொரு 100 மாணவர்களுக்கும் 100 மாணவிகளும், மருத்துவப் படிப்பில் ஒவ்வொரு 100 மாணவர்களுக்கும் 101 மாணவிகளும் சேர்ந்துள்ளனர். இது இப்போது பி.எஸ்சி படிப்பில் 100 மாணவர்களுக்கு 113 மாணவிகளும், இரண்டு ஆண்டுகளில் எம்.பி.பி.எஸ் படிப்பில் 100 மாணவர்களுக்கு 110 மாணவிகளும் அதிகரித்துள்ளது.

ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் படிப்புகளில் மாணவர் சேர்க்கையின் பாலின அமைப்பு வேகமாக மாறுகிறது. மேலும் அதிகமான பெண்கள் உயர் கல்வி படிப்பதற்காக முன்வருகிறார்கள். ஒட்டுமொத்தமாக, ஒவ்வொரு 100 மாணவர்களுக்கும், மாணவிகளில் எண்ணிக்கை 2015-16ல் 86ல் இருந்தது, தற்போது 2019-20ல் 96 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவின் மொத்த சேர்க்கை விகிதம் (ஜி.இ.ஆர்) 2015-16ல் 24.5 சதவீதம். அதுவே, 2019-20ல் 27.1 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த மிகப்பெரிய மாற்றம் பெண்கள் உயர்கல்வியில் அதிக அளவில் இணைந்ததால் நிகழ்ந்துள்ளது. அதேநேரம், ஆண்களுக்கான ஜி.இ.ஆர் கடந்த ஐந்து ஆண்டுகளில் 25.4 சதவீதத்திலிருந்து 26.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதுவே, பெண்களுக்கு பார்க்கும்போது 2015-16ல் 23.5 சதவீதத்திலிருந்து 2019-20ல் 27.3 சதவீதமாக உச்சம் பெற்றுள்ளது.

ஜி.இ.ஆர் அல்லது GER என்பது இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சி அளவிலான படிப்புகளில் சேரப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கையை நிர்ணயிப்பதற்கான புள்ளிவிவர குறிப்பாகும். இந்தப் புள்ளிவிவரம் ஒருபுறம் மகிழ்ச்சியை தரும் வேளையில், மறுபுறம் இன்னொரு தகவலையும் சொல்கிறது.

அறிவியல் படிப்புகளில் பெண்களின் சேர்க்கை எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், பி.டெக் போன்ற படிப்புகளில் ஒவ்வொரு 100 மாணவர்களுக்கும் வெறும் 42 மாணவிகள் மட்டுமே சேர்க்கின்றனர் என்று தரவுகள் சொல்கின்றன. இதுவே இளங்கலை சட்ட படிப்புகளில் 100 மாணவர்களுக்கு 53 மாணவிகள் சேர்க்கின்றனர்.



உயர்கல்வியில் மொத்த சேர்க்கை 2019-20ல் 3.85 கோடியாக இருந்தது. 2018-19ல் இது 3.74 கோடியாக என்று இருந்தது. 3.85 கோடி மாணவர்களில், 3.06 கோடி பேர் இளங்கலை படிப்புகளை படிக்கின்றனர். இது மொத்த சேர்க்கையில் 79.5% ஆகும். இதேபோல், 43.1 லட்சம் மாணவர்கள் அல்லது 11.2% பேர் முதுகலை படிப்பும், 2.02 லட்சம் பி.எச்.டி. படிப்பும் படிக்கின்றனர்.

ஒட்டுமொத்தமாக, பொறியியல் தவிர, முக்கிய துறைகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இளங்கலை படிப்பு அளவில் எடுத்துக்கொண்டால், பொறியியல் படிப்புகளுக்கான சேர்க்கை கடந்த ஆண்டு 38.5 லட்சத்திலிருந்து 37.2 லட்சமாக குறைந்துள்ளது. முதுகலை படிப்பு மட்டத்திலும், பொறியியல் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

உயர் கல்வி சேர்க்கை நிலைமை குறித்த இந்த கணக்கெடுப்பு கடந்த ஐந்து ஆண்டுகளின் போக்கை உறுதிப்படுத்துகிறது. ஆனால் இந்த கணக்கெடுப்பு, கொரோனா தொற்றுநோய் காரணமாக, கல்லூரிகள் மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் வைப்பதற்கு முன்பு எடுக்கப்பட்டது. அடுத்த ஆண்டு எடுக்கவிருக்கும் கணக்கெடுப்பு கொரோனா காரணமாக படிப்பை கைவிட்டவர்கள் நிலையை எடுத்துரைக்கும் வகையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இந்த கணக்கெடுப்பானது, இந்தியாவின் 1,019 பல்கலைக்கழகங்கள், 39,955 கல்லூரிகள் மற்றும் 9,599 கல்வி நிறுவனங்களின் பதில்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.