குறிப்பிட்ட சில பொறியியல் படிப்பில் சேர்வதற்கு இனி கணிதம், இயற்பியல், வேதியியல் அவசியமில்லை என அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அறிவித்திருக்கிறது. அதன் புதிய விதிகள் என்ன என்பதை தெரிந்துகொள்வோம்.
பன்னிரெண்டாம் வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களை கட்டாயம் படித்திருந்தால் மட்டுமே, பொறியியல் படிப்பில் சேர முடியும் என்ற சூழல் இருந்தது. ஆனால், பள்ளிகளில் இந்த படிப்புகளை படிக்காமல் சில குறிப்பிட்ட பொறியியல் படிப்புகளில் சேரலாம் என்று அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் எனப்படும் ஏஐசிடிஇ அறிவித்திருக்கிறது.
2022-23ம் ஆண்டு பொறியியல் படிப்பு சேர்க்கை தொடர்பான விதிமுறைகளை ஏஐசிடிஇ வெளியிட்டுள்ளது. கணினி அறிவியல், மின் மற்றும் மின்னணு பொறியியல் ஆகிய படிப்புகளில் சேர 12-ம் வகுப்பில் கணிதம் பயில வேண்டிய அவசியமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் வேளாண் பொறியியல், கட்டுமான பொறியியல், உயிரி தொழில்நுட்பம் படிப்புகளை பயில 12ம் வகுப்பில் கணிதம் பயில்வது அவசியமில்லை எனவும், வேளாண் பொறியியல், ஃபேஷன் டெக்னாலஜி படிப்புகளுக்கும் 12-ம் வகுப்பில் இயற்பியல், வேதியியல் பயில வேண்டிய அவசியமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
12-ம் வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல் பயிலாதவர்களுக்கு பொறியியல் படிப்பில் முதல் இரண்டு செமஸ்டர்களில் பிரிட்ஜ் கோர்ஸ் முறையில், கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்கள் கற்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏஐசிடிஇ வெளியிட்ட இந்த அறிவிப்பு பல மாணவர்களுக்கு பொறியியல் படிப்பில் சேருவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் இருந்தாலும், கல்வியின் தரத்தை பாதிக்குமா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது. உயிரியியல் படித்து வரும் மாணவர்கள் கூட, பிரிட்ஜ் கோர்ஸ் மூலம் கணிதம் கற்றுக்கொண்டு, பொறியியல் படிப்பில் அதிகளவில் மதிப்பெண்கள் பெற்று நல்ல வேலையில் அமர்ந்துள்ளதாக கல்வி தாளாளரான ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.
ஆனால், இதனை கல்வியாளரான ஜெயபிரகாஷ் காந்தி மறுத்துள்ளார். கல்வியின் தரம் நிச்சயம் குறையும் என்பதே அவரின் வாதமாக உள்ளது. புதிய விதிமுறைகளால், வேலையின்மை அதிகரித்து காணப்படும் என்றும் ஜெயபிரகாஷ் காந்தி தெரிவித்துள்ளார். பொறியியல் படித்துவிட்டு அதற்கேற்ற வேலை செய்பவர்களின் எண்ணிக்கை சராசரியாக 30 சதவிகிதம் என்ற அளவிலேயே உள்ளது. இதுதொடர்பாக நியூஸ் 360 டிகிரி வீடியோவில் விரிவாகக் காணலாம்.