கல்வி

வேளாண்மைக் கல்வியில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்... முழு விவரம்!

வேளாண்மைக் கல்வியில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்... முழு விவரம்!

webteam

தமிழகத்தில் வேளாண்மைப் படிப்புகள் மீதான ஆர்வம் மாணவர்களிடையே அதிகரித்துவருகிறது. வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பற்றிய படிப்புகளுக்கு சிறந்த எதிர்காலம் உருவாகியுள்ளது.  வேளாண்மைப் படிப்புகள் மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்து கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் படிப்புகளுக்கான தலைலவர் முனைவர் எம். கல்யாணசுந்தரம் விரிவாகப் பேசினார்.

இன்றைய விவசாயம்
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 15 சதவீகிதம் வேளாண் துறையில் இருந்தே பெறப்படுகிறது. உலகளவில் வேளாண் உற்பத்தியை பொறுத்தவரையில் இந்தியா, பருப்பு வகைகள் உற்பத்தியில் முதலிடத்திலும், நெல் மற்றும் கோதுமை விளைச்சலில் இரண்டாவது இடத்திலும் பணப்பயிர்களான கரும்பு, நிலக்கடலை மற்றும் பருத்தியில் இரண்டாவது இடத்திலும் உள்ளது. மேலும் காய்கறி மற்றும் பழ வகைகள் விளைச்சலில் சீனாவிற்கு அடுத்த நிலையில் அதிக அளவில் விளைவிக்கும் நாடாக திகழ்கிறது.

மத்திய அரசு பலவித நலத்திட்டங்கள் மூலம் வேளாண் துறையில் உற்பத்தியை அதிகரிக்கவும் வேளாண்மை சார்ந்த வேலைவாய்ப்புகளைப் பெருக்கவும் முனைந்துள்ளது. விவசாயிகள் நடைமுறையில் அறிவியல் தொழில்நுட்பத்தைப் பின்பற்றாதது, உற்பத்தி பொருட்களுக்கு சரியான விலை கிடைக்காமை மற்றும் குறைவான அறுவடைக்குப் பிறகான பதப்படுத்தும் தொழில்நுட்பம் போன்றவற்றால் விவசாயிகளுக்கு வருமான இழப்பு ஏற்படுகிறது.

எம். கல்யாணசுந்தரம் 

இன்றைய விவசாயிகள், அடுத்த தலைமுறையினரை வேளாண்மையில் ஈடுபடுத்தாத காரணத்தால், வேளாண் உற்பத்தி படிப்படியாக குறைந்துவருகிறது. மருத்துவம், பொறியியல் கல்வியைத் தாண்டி வேளாண்மை சார்ந்த படிப்புகளுக்கு மாணவர்கள் ஆர்வத்துடன் நகர்ந்துவருவது நம்பிக்கையளிப்பதாக மாறியிருக்கிறது.

படிப்புகளும் வேலைவாய்ப்பும்


வேளாண்மைப் படிப்புகளுக்கு அரசு மற்றும் தனியார் துறைகளில் நல்ல வேலைவாய்ப்புகள் உள்ளன. வேளாண் பட்டதாரிகளில் பலரும் சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வென்று இந்தியா முழுவதும் உயர்பணிகளில் இருந்துவருகின்றனர். இளங்கலை வேளாண்மை படித்து முடித்தவர்கள் பொது மற்றும் தனியார் வங்கிகளில் விவசாயம் சார்ந்த துறையில் வேலைவாய்ப்பைப் பெறுகின்றனர்.

வேளாண்மையில் முதுகலை மற்றும் முனைவர் பட்டம் பெற்றவர்கள் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர்களாகவும், வேளாண் ஆராய்ச்சி நிலையங்களில் ஆராய்ச்சியாளராகவும், புதுவித தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளில் திறம்பட செயல்படுகின்றனர். பூச்சி மருந்து, உரம் உற்பத்தி, உயிர் உரங்கள் உற்பத்தி, அறுவடைப் பின்சார் தொழில்நுட்ப நிறுவனங்களில் அதிக வேலைவாய்ப்பு உள்ளது.

வேளாண்மை சார்ந்த கூட்டுறவு அமைப்புகளுக்கு இந்திய அரசால் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. வேளாண் கூட்டுறவு மூலம் சுயதொழில் தொடங்குவதற்கு நிதிஉதவி பெறலாம். தொழில்நுட்பத் தகவல் துறையைப் பொறுத்தவரையில் வேளாண்மை பட்டதாரிகளுக்கு வேளாண்மை தொடர்புடைய மென்பொருட்கள் தயாரிக்கும் பணிகள் அதிகரித்துள்ளன. மேலும், படிக்கும்போதே மாணவர்கள் செய்முறை அனுபவத்தைப் பெறுவதால் சுயதொழில் செய்வதற்கு அது பெரும் உதவியாக உள்ளது. 

பல்துறை வாய்ப்புகள்
கல்வி மற்றும் வேளாண் ஆராய்ச்சி நிறுவனங்கள், ஆட்சிப்பணிகள், வேளாண் விரிவாக்க மையங்கள் போன்றவற்றில் பல்துறை பணிகள் உள்ளன. இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம், இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகம், பாதுகாப்புத்துறை, தேசிய மற்றும் மாநில வேளாண்மைத் துறைகளில் ஆய்வாளர்களாக பணியாற்றலாம். மேலும் வேளாண் அறிவியல் நிலையங்களில் கள ஆய்வாளர்களாகவும், உணவு தரக்கட்டுப்பாடு அதிகாரிகளாகவும் உள்ளனர். இவைதவிர இந்திய வன ஆட்சிப்பணி, வானிலை ஆராய்ச்சிக் கழகம், உயர் தொழில்நுட்பக் கழகம் ஆகியவற்றிலும் பணிகள் கிடைக்கின்றன.

கூட்டுறவு அமைப்புகளான தொடக்க வேளாண்மை வங்கிகள், சர்க்கரை ஆலைகள், காகித தொழிற்சாலைகள், நெசவு தொழிற்சாலைகள், உரத் தயாரிப்பு நிறுவனங்கள், பால் பண்ணை அமைப்புகள், காபி, தேயிலை மற்றும் கொய்மலர் ஏற்றுமதி, உணவு தயார் செய்யும் கூட்டுறவு அமைப்புகளில் வேளாண்மை மாணவர்களுக்கு  முன்னுரிமை அளிக்கப்படுகிறது. தனியார் நிதி நிறுவனங்கள், காப்பீட்டு கழகங்கள், தொண்டு நிறுவனங்கள், வேளாண் சார்ந்த உற்பத்தி நிறுவனங்கள், வேளாண் உற்பத்தி நிறுவனங்கள் போன்றவையும் முன்னுரிமை அளிக்கின்றன.

தகவல்தொழில்நுட்பத் துறைகள்
அபரிமிதமான தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி வேளாண் துறையிலும் எண்ணற்ற பங்களிப்பபைச் செய்துவருகிறது. வேளாண் துறை சார்ந்த மென்பொருள் உருவாக்குவதில் செய்யப்பட்டுள்ள கூடுதல் முதலீடுகள்,  இத்துறை வல்லுநர்களின் தேவையையும் அதிகரித்துள்ளது. இந்திய வேளாண்மையின் வளர்ச்சியை அடுத்தகட்டத்திற்கு எடுத்து செய்வதற்கு இந்த துறையின் பங்கு முக்கியமானது. வேளாண் மென் பொருட்கள் வடிவமைப்புக்கு வேளாண்மை மாணவர்களின் பங்களிப்பு அதிகம். வெளிநாடுகளிலும் நாளுக்கு நாள் வேளாண்மை சார்ந்த சாதாரண பணிகள் முதல் ஆய்வுகள் வரை பெருகிவருகின்றன.

இங்கு வேளாண்மை பாடப்பிரிவில் மாணவர்கள், வேளாண்மை சார்ந்த அடிப்படை அறிவியல், பொருளியல் மற்றும் மேலாண்மை ஆகியவற்றை செயல்முறையில் கற்கின்றனர்.

தோட்டக்கலை படிப்புக்கு அரசுப் பணிளைவிட தனியார் வேலைவாய்ப்புகள் அதிகம். சுயதொழில் தொடங்கலாம். காய்கனி பதப்படுத்துதல் மற்றும் மதிப்பூட்டுதல், இயற்கைத் தோட்ட வடிவமைப்பு , அழகுச் செடிகள், பணப்பயிர்கள். நாற்றங்கால் பண்ணை, நறுமணப்பொருட்கள் தொழிற்சாலை, இயற்கை மருத்துவச் செடிகள் மூலிகைகள் உற்பத்தி, கொய் பலர் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி, விதை உற்பத்தி, விளைப்பொருட்கள் மதிப்பு கூட்டுதல் போன்றவை தோட்டக்கலை சார்ந்த சுயதொழில்களாகும். தமிழகத்தில் மாவட்டம்தோறும் தோட்டக்கலை ஆய்வாளர் பணியிடங்களில் இவர்களையே தோட்டக்கலைத் துறை பணியமர்த்துகிறது.

வேளாண் பொறியியல்

வேளாண்மையில் பொறியியலையும், தொழிநுட்பத்தையும் பயன்படுத்தி வேளாண் துறைக்குத்  தேவையான கருவிகள், இயந்திரங்கள் போன்றவற்றை வடிவமைத்தல், பாசனக்கருவிகள் சொட்டுநீர்ப் பாசனம், நுண்ணீர் பாசன கருவி தயாரித்தல் போன்றவற்றில் அதிக பணிகள் உள்ளன. 

வேளாண் வணிக மேலாண்மை
வேளாண் பொருட்கள் மற்றும் தொழில்நுட்பங்களை சந்தைப்படுத்துதல், விலை பகுப்பாய்வு, வனத்தயாரிப்புகளை வணிகப்படுத்துதல், விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் வேளாண் கருத்துகளை கொண்டுசேர்க்கும் கட்டமைப்புகளை உருவாக்குதல் உள்ளிட்ட பலவகையான பாடங்கள் பயிற்றுவிக்கப்படுகின்றன. 

உணவு, ஊட்டச்சத்து மற்றும் உணவு முறைகள்
தமிழகத்தில் ஏராளமான அறிவியல் கல்வி நிலையங்கள் மூன்று ஆண்டு ஊட்டச்சத்து படிப்பை மட்டும் பயிற்றுவிக்கின்றனர். நமது வேளாண் பல்கலைகழகத்தில்கீழ் பயிற்றுவிக்கப்படும் உணவு, ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறைகள் பட்டப்படிப்பில் உணவு முறைகளுடன் வேளாண் பற்றிய அடிப்படை கல்வி, அறுவடை பின்சார் தொழில்நுட்பம், உணவு பதப்படுத்தும் தொழில்நுட்பம், மதிப்பூட்டுதல் போன்றவையும் பயிற்றுவிக்கப்படுகின்றன.

பட்டுப்புழு வளர்ப்பும் உணவுத் தொழில்நுட்பமும்
எளிய முறையில் செய்யக்கூடிய சுயதொழில் வாய்ப்பாக பட்டுப்புழு வளர்ப்பு பட்டப்படிப்பு விளங்குகிறது. இந்தப் பயிற்சி பெற்றோர், மத்திய மற்றும் மாநில அரசின் ஜவுளி துறை சார்ந்த பணிகளில் நேரடி பணி வாய்ப்பைப் பெறுகின்றனர். மேலும் குறைவான முதலீட்டில் அதிக லாப ஈட்டும் துறையாக பட்டுப்புழு வளர்ப்பு இருந்துவருகிறது. 

இன்றைய நிலையில், அதிக வேலைவாய்ப்புகள் நிறைந்த துறையாக உணவுத் தொழில்நுட்பத் துறை திகழ்கிறது. முக்கியமாக உணவு சார்ந்த அடிப்படை அறிவியல், பதப்படுத்துதல், வகைப்படுத்துதல், சேமிக்கும் தொழில்நுட்பம், உடனடியாக தயாரிக்கக்கூடிய உணவு வகைகள் வணிகரீதியாக தயாரித்தல், பழங்கள் மற்றும் காய்கறிகள் பதப்படுத்தும் தொழில்நுட்பம் போன்றவற்றைக் கற்பிக்கப்படுகின்றன. இந்த துறையில் படித்தவர்களுக்கு உணவு பகுப்பாய்வாளர்கள், புதிய உணவுத் தொழில்நுட்பங்களை உருவாக்கும் நிறுவனங்கள், தரக்கட்டுப்பாடு ஆய்வகங்கள், உணவு சார்ந்த ஆராய்ச்சி மையங்கள், தயார்நிலை உணவுகள் மற்றும் குளிர்பானங்கள் தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்களில் பணிகள் கிடைக்கின்றன.

இன்றைய உலகின் மாற்றத்திற்கு ஏற்ப தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எவ்வாறு விவசாயம் செய்வது, பதப்படுத்துவது மற்றும் சந்தைப்படுத்துவது ஆகியவற்றின் அடிப்படையில் பத்து வகையான வேளாண் இளம் அறிவியல் பட்டப்படிப்புகள் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் நடத்தப்படுகின்றன. வேளாண் சார்ந்த பாடப்பிரிவுகளைத் தேர்ந்தெடுத்து படிப்பதன் மூலம் எதிர்காலத்தில் மிகச்சிறந்த பணிகளையும், நிலையான வருமானத்தையும், சமூகத்தில் உயர்ந்த இடத்தையும் பெறமுடியும்.