கல்வி

விடைத்தாள் திருத்த வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை - பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை

விடைத்தாள் திருத்த வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை - பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை

ச. முத்துகிருஷ்ணன்

10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிக்கு வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த மாதம் 5-ஆம் தேதி முதல் துவங்கி மே 31-ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. இதையடுத்து விடைத்தாள் திருத்தும் பணிகள் ஜூன் 1-ஆம் தேதி துவங்கியது. ‘விடைத்தாள் திருத்தும் மையங்களில் போதிய வசதி இல்லை’ என்று குற்றம்சாட்டி தமிழகத்தில் பல இடங்களில் போதிய ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்திருந்தனர். தங்களுக்கு விருப்பமான மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணிக்கு அனுப்பவேண்டும் என வலியுறுத்தியும் சில ஆசிரியர்கள் புறக்கணித்து இருந்தனர்.

“வழக்கமாக பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் ஆசிரியர்களின் விருப்பத்தின் பேரில் தான் மையங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். ஆனால் இந்தாண்டு வழக்கமான முறையில் மாற்றம் செய்ததால் பெரும்பாலான ஆசிரியர்கள் தங்களது இருப்பிடத்தில் இருந்து வெகுதொலைவில் உள்ள மையங்களுக்கு செல்ல வேண்டி உள்ளது. ஏற்கெனவே இதுதொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, வேறு வழியின்றி பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணியை நாங்கள் புறக்கணிப்பு செய்துள்ளோம்.” என்று போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆசிரியர்களின் இதுபோன்ற செய்கைகளால் விடைத்தாள் திருத்தும் பணி பாதிக்கப்படுவதாக புகாரளிக்கப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஒதுக்கப்பட்ட ஆசிரியர்களை விடுவிக்க தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. திட்டமிட்ட தேதியில் தேர்வு முடிவுகளை வெளியிடவேண்டும் என்பதால் அனைவரும் தவறாமல் பணியாற்ற உத்தரவு வெளியாகியுள்ளது. விடைத்தாள் திருத்தும் பணிக்கு வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.