கல்வி

செம்மொழி தமிழாராய்ச்சி நிறுவனத்தை மத்திய பல்கலை. உடன் இணைக்கும் முடிவை கைவிடுக : சீமான்

செம்மொழி தமிழாராய்ச்சி நிறுவனத்தை மத்திய பல்கலை. உடன் இணைக்கும் முடிவை கைவிடுக : சீமான்

Veeramani

செம்மொழி தமிழாராய்ச்சி நிறுவனத்தை மத்தியப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் மத்திய அரசின் முடிவை தமிழக அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “செம்மொழி தமிழாராய்ச்சி நிறுவனத்தை மைசூரிலுள்ள மத்திய பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் மத்திய அரசின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது. இது முழுக்க முழுக்கத் தமிழ்மொழி மீதான மத்திய அரசின் காழ்ப்புணர்ச்சியினாலும், வன்மத்தினாலும் விளைந்த கொடுஞ்செயலேயாகும். தமிழுக்கும், தமிழர்களுக்கும் எதிராகத் தொடர்ந்து செயல்பட்டு வரும் மத்திய அரசின் இப்படுபாதகச்செயல்கள் யாவும் வன்மையான கண்டனத்திற்குரியது.

கடந்த 2006 ஆம் ஆண்டு உயர்தனிச்செம்மொழியாம் தமிழ் மொழியின் மேன்மைக்காகவும், வளர்ச்சிக்காகவும் ஆய்வுப்பணிகளை மேற்கொள்ள ‘செம்மொழி தமிழாராய்ச்சி நிறுவனம்’ தொடங்கப்பட்டது. 2008 ஆம் ஆண்டுவரை மைசூரிலுள்ள, இந்திய மொழிகள் ஆராய்ச்சி நிறுவனத்தின் கீழ், ‘செம்மொழித்தமிழ் உயராய்வு மையம்’ எனும் பெயரில் செயல்பட்டு வந்த இந்நிறுவனம், தமிழறிஞர்களின் நீண்ட நெடியப் போராட்டத்திற்குப் பிறகு, சென்னைக்கு மாற்றப்பட்டது. அதேபோல, தமிழாய்ந்த தமிழறிஞர் ஒருவரை முழுநேர, நிரந்தர இயக்குநராக நியமிக்கக்கோரி பல ஆண்டுகளாகப் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தும் அந்நிறுவனம் தொடங்கி, ஏறத்தாழ 12 ஆண்டுகள் கழித்துதான், தமிழ்ப்பேராசிரியர் ஒருவர் முழுநேர இயக்குநராகக் கடந்த சூன் மாதம் நியமிக்கப்பட்டார்.

தமிழ்மொழியின் தொன்மை மற்றும் தனித்தன்மையின் காரணமாகச் செம்மொழித்தமிழுக்கு மட்டுமே தன்னாட்சி அதிகாரத்துடன் கூடிய நிறுவனம் தொடங்க முடிந்தது. செம்மொழி தமிழாராய்ச்சி நிறுவனம் கி.பி. 6 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய இலக்கிய, இலக்கண வளங்களைக் கொண்டு 12 புலங்களுடன் சிறப்பாக இயங்கிவருகிறது. ஆனால், ஏனைய செம்மொழி தகுதிபெற்ற மொழிகளெல்லாம் தனித்த நிறுவனம் தொடங்க முடியாமல் மையமாக மட்டுமே இயங்கிவருகிறது. அந்தக் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே செம்மொழி நிறுவனத்திற்குப் பல்வேறு துரோகங்களை மத்தியில் ஆண்ட அரசுகள் தொடர்ந்து இழைத்து வந்தன. செம்மொழி நிறுவனத்திற்குத் தமிழுக்குத் தொடர்பில்லாதவர்களைப் பொறுப்பு இயக்குநர்களாக்கி, நிரந்தர இயக்குநரை நியமிக்காமல் இழுத்தடித்தது, ஊழியர்களைப் பாதியாகக் குறைத்தது, நிறுவனத்திற்கு ஒதுக்கப்படும் நிதியை 100 விழுக்காட்டிலிருந்து வெறும் 8 விழுக்காடாகக் குறைத்ததன் மூலம் தொல்பதிப்பு, மொழிப்பெயர்ப்பு, பன்முக ஆய்வு உள்ளிட்ட எவ்வித மொழியாராச்சியும் நடைபெறாமல் தடுத்தது, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளிவந்த செம்மொழி நிறுவனச் செய்தி இதழை நிறுத்தியது, நிறுவனத்தின் 12 தனித்தனித்துறைகளை வெறும் 7 திட்டங்களெனச் சுருக்கியது எனத் தமிழ்ச்செம்மொழி ஆய்வு நிறுவனத்தை முற்றாக முடக்க மத்தியில் ஆண்ட அரசுகள் தொடர்ந்து செய்த துரோகங்கள் சொல்லிடங்காது.

அத்துரோக வரலாற்றின் தொடர்ச்சியாக, கடந்த 2017ஆம் ஆண்டு செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தைத் திருவாரூரிலுள்ள மத்தியப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்போவதாகச் செய்திகள் வெளியாக, தமிழகத்தில் அதற்குக் கடுமையான எதிர்ப்பு கிளம்பியதும் அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. அதன்பின், புதிய கல்விக்கொள்கையில், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் மத்திய பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அப்போதே, புதிய கல்வி கொள்கையையும், அவ்விணைப்பையும் கடுமையாக எதிர்த்தோம். இந்நிலையில், தற்போது மீண்டும் செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தை மைசூரிலுள்ள ‘பாரதிய பாஷா விஷ்வ வித்யாலயா’ எனும் மத்திய பல்கலைக்கழகத்துடன் இணைக்க மத்திய அரசு முடிவெடுத்திருப்பது மிக மோசமான நிர்வாகச்சீர்கேடாகும்.

ஆரிய மொழியாம் சமஸ்கிருதத்திற்குப் பல புதிய பல்கலைக்கழங்களையும், நாடு முழுவதுமுள்ள பல்கலைக்கழகங்களில் தனித்துறைகளையும் உருவாக்கி வரும் மத்திய அரசு, தமிழுக்குத் தொடர்ந்து வஞ்சகம் விளைவிப்பது தமிழர்களின் உள்ளத்து உணர்வுகளைச் சீண்டிப்பார்ப்பதாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் செம்மொழி வளர்ச்சி நிதியென்று தமிழ் உள்ளிட்ட செம்மொழிகளுக்கு வெறும் 30 கோடியை மட்டுமே வழங்கிவிட்டு, வழக்கொழிந்த சமஸ்கிருதத்திற்கு ஏறத்தாழ 20 மடங்கு அதிகமாக 600 கோடி ரூபாய் நிதியை செலவழிப்பதன் மூலம் மத்தியில் ஆளும் பாஜக அரசின் உள்நோக்கத்தையும், ஆரியத்துவப்போக்கையும் உணர்ந்து கொள்ளலாம். செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தை தமிழகத்தை விட்டே வெளியேற்றி, மத்திய பல்கலைக் கழகத்தின் கீழ் ஒரு துறையாக இணைக்க எடுத்திருக்கும் முடிவு எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டாலும் தன்னாட்சி தகுதியுடையது செம்மொழி தமிழாய்வு நிறுவனம். அதன் தனித்தன்மையைக் குலைத்து, செயல்படாமல் முடக்குவதற்குச் செய்யப்படும் இச்சதிச்செயல் அரங்கேற்றப்பட்டால் அந்நிறுவனம் மொத்தமாகச் செயலிழப்பது உறுதி.

ஆகவே, பல்கலைக்கழகத்திற்கு இணையான ஒரு நிறுவனத்தைத் தரம் குறைத்து மத்தியப் பல்கலைக்கழகத்தின் கீழ் ஒரு துறையாக இணைக்கும் முடிவை மத்திய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் எனவும், தமிழாய்வு நிறுவனத்தின் தலைவராக இருக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தை முடக்கத் துடிக்கும் மத்திய அரசின் முடிவை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.