கல்வி

“கலெக்டராக வேண்டும்” - 12ஆம் வகுப்பில் சாதித்து உதவியை தேடும் நரிக்குறவர் இன மாணவி

“கலெக்டராக வேண்டும்” - 12ஆம் வகுப்பில் சாதித்து உதவியை தேடும் நரிக்குறவர் இன மாணவி

webteam

12-ம் வகுப்பு தேர்வில் சாதித்த நரிக்குறவர் இனத்தை சேர்ந்த மாணவி ஒருவர் தனது மேல்படிப்புக்கு அரசும், மாவட்ட நிர்வாகமும் உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்

மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் வசித்து வரும் நரிக்குறவர் இனத்தை சேர்ந்த மாணவி தேவயானி. இவரது தந்தை கணேசன், தாய் லட்சுமி. இவருக்கு மூன்று சகோதரிகளும், ஒரு சகோதரனும் உள்ளனர். மாணவியின் தாய் தந்தை ஊர் ஊராக சென்று குறி சொல்லி பிழைப்பு நடத்தி வருகின்றனர். குறி சொல்வதன் மூலம் கிடைக்கும் பணத்தில்தான் தங்களது குடும்பத்தையும், குழந்தைகளையும் வளர்த்து வருகின்றனர்.

மேலும் மகள் தேவயானியை திருப்பரங்குன்றம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படிக்க வைத்துள்ளனர். மாணவி தேவயானியும் தாய் தந்தையர் படும் கஷ்டத்தை உணர்ந்து, குடும்ப வறுமையை மனதில் கொண்டு நன்றாக படித்து வந்துள்ளார். இந்நிலையில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவில் மாணவி தேவயானி 600க்கு 500 மதிப்பெண்களை பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார்.

குடும்ப வறுமயிலும் நன்றாக படித்து சாதித்த மாணவி தேவயானி தற்போது கல்லூரி சென்று படிக்க பண வசதி இல்லாமல் தவித்து வருகிறார். தற்போது எனக்கு கல்லூரியில் சேர பண வசதி இல்லை எனவும், எளிய குடும்பத்தில் இருப்பதால் கல்லூரியில் சீட் பெறுவது கடினமாக உள்ளதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், “எங்கள் இனத்தில் நான் படித்து நல்ல மதிப்பெண்களை பெற்று கல்லூரியில் படித்தால் தான் என்னைப்பார்த்து நான்கு பேர் படிப்பார்கள். என்னுடைய கல்லூரி படிப்புக்கு அரசும், மாவட்ட நிர்வாகமும் உதவ வேண்டும். நான் படித்து மாவட்ட ஆட்சியராகி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே எனது விருப்பம்.

5 பேரில் நான் மூன்றாவதாக பிறந்தேன். என்னுடைய அக்கா படிக்க வசதியில்லாமல் திருமணம் செய்து வைத்து விட்டார்கள். என்னை மட்டுமே குடும்பத்தில் பெற்றோர் படிக்க வைத்துள்ளார். எனக்கு 2 அக்கா மற்றும், ஒரு தம்பி, தங்கை ஆகியோர் உள்ள நிலையில், குடும்பத்தை காக்க நான் படித்தாக வேண்டும்” எனத் தெரிவித்தார்.