கூகுள் குரு இன்ஸ்டா
கல்வி

”கலாம்தான் எனக்கு இன்ஸ்பிரேஷன்”-UPSC தேர்வுக்கு வகுப்பெடுக்கும் 7வயது சிறுவன்-யார் இந்த கூகுள் குரு?

உத்திரபிரதேசத்தை சேர்ந்த 7 வயது சிறுவன் ஒருவன் யு.பி.எஸ்.சி தேர்வெழுதும் மாணவர்களுக்கு வகுப்பெடுக்கிறார்

Jayashree A

மாணவர்கள் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வில் வெற்றிபெற வேண்டுமென்றால் கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் மிக அவசியம். மிக சொற்பமானவர்கள் மட்டுமே அதில் தேர்வு பெறுவார்கள். அந்த அளவில் அறிவுக்கூர்மையை சோதிக்கும் அளவிற்கு தேர்வுகள் கடினமாக இருக்கும்.

இந்நிலையில், உத்திரபிரதேசத்தை சேர்ந்த 7 வயது சிறுவன் ஒருவர் யு.பி.எஸ்.சி தேர்வெழுதும் மாணவர்களுக்கு வகுப்பெடுக்கிறார் என்றால் நம்பமுடிகிறதா?

உத்திரபிரதேச மாநிலம் விருந்தாவனத்தைச் சேர்ந்த ஏழு வயது சிறுவனை அனைவரும் ’கூகுள் குரு’ என்று அழைத்து வருகின்றனர்.

இந்த கூகுள் குரு சிறுவன் UPSC தேர்வுக்கு படிப்பதில் சிறந்து விளங்குவது மட்டுமல்லாமல், மாணவர்களுக்கு 14 பாடங்களை சொல்லித்தருகிறான். இவரது நினைவாற்றலை கண்டு வியந்தவர்கள் இவரை செல்லமாக 'கூகுள் குரு' என்று அழைத்துவருகின்றனர்.

கூகுள் குரு என்று அழைக்கப்படும் சிறுவன் உபாத்யாய் உத்திரபிரதேச மாநிலம் விருந்தாவனத்தில் உள்ள கோர நகர் காலனியைச் சேர்ந்தவர். இவர் தனது ஐந்தாவது வயதிலிருந்தே UPSC மற்றும் பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி கற்பித்து வருகிறார். மேலும், இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பெற்றுள்ளார்.

அயோத்தி ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்திரத்தின் தலைவரான மஹந்த் நிருத்ய கோபால் தாஸ், என்பவர் சமீபத்தில் சிறுவன் உபாத்யாய்க்கு ’இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ சான்றிதழை வழங்கி கௌரவித்தார்.

ஒரு நேர்காணலில், உபாத்யாவின் தந்தை அரவிந்த் குமார் உபாத்யாய், ”என் மகனுக்கு விரைவாக மனப்பாடம் செய்யும் திறன் உள்ளது. அவன் குழந்தையாக இருக்கும் பொழுதே, 60 நாடுகளின் கொடி மற்றும் அதன் தலைநகரங்களை மனப்பாடமாக தெரிவித்தான். இவனது அறிவாற்றலை கண்ட பல மாணவர்கள் ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் பல்வேறு பாடங்களை இவனிடம் கற்பித்து வருகிறார்கள். இதில் பொறியியல் மற்றும் யுபிஎஸ்சி போன்ற போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களும் அடக்கம்” என்று கூறியுள்ளார்.

இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் மட்டுமன்றி, கூகுள் குரு பல சாதனைகளையும் படைத்துள்ளார். தேசிய, சர்வதேச அளவில் பல்வேறு இடங்களில் விருந்தினர் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். APJ அப்துல் கலாமைப்போல ஒரு விஞ்ஞானியாகவேண்டும் என்று கூகுள் குரு ஆசைப்படுகிறாராம். அவரது ஆசை பலிக்கட்டும்.