கல்வி

பள்ளிகளைத் திறக்க 50% பெற்றோர் எதிர்ப்பு? - கருத்துக்கணிப்பும் கள நிலவரமும்

பள்ளிகளைத் திறக்க 50% பெற்றோர் எதிர்ப்பு? - கருத்துக்கணிப்பும் கள நிலவரமும்

webteam

தமிழக அரசு நடத்திய கருத்துக்கணிப்பில் 50 சதவீதத்திற்கும் அதிகமான பெற்றோர் பள்ளிகளைத் திறக்க திறக்கவேண்டாம் என கருத்து தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், கள நிலவரத்தையும் கொஞ்சம் பார்ப்போம்.


கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கத்தால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டுள்ளன. கொரோனா தொற்றின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு சூழ்நிலைகளுக்கு ஏற்ப தளர்வுகளை அறிவித்து வந்த நிலையில், இம்மாதம் 16 ஆம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் இயங்கும் என அறிவித்தது. இதற்கு பல்வேறு கட்சிகளும், கல்வியாளர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். பெற்றோர் தரப்பிலும் அதிருப்தி நிலவுகிறது.
இதனைக் கருத்தில் கொண்ட தமிழக அரசு, பள்ளி மாணவர்களிடமும், பெற்றோர்களிடமும் இது தொடர்பாக கருத்துக்கணிப்பு நடத்த முடிவு செய்தது.


50% பெற்றோர் எதிர்ப்பு?
இதற்காக, பள்ளிகளுக்கு மாணவர்களின் பெற்றோர்களை வரவழைத்து, அவர்களிடம் ஒரு விண்ணப்பம் கொடுக்கப்பட்டது. அந்த விண்ணப்பத்தின் மூலம் அவர்களின் கருத்துக்கள் வாங்கப்பட்டன. அதன் பின்னர், அதை அறிக்கையாக பள்ளியின் தலைமையாசிரியர் மேலிடத்திற்கு சமர்ப்பித்துள்ளார். காலை 9 மணியிலிருந்து மதியம் 1 மணி இப்பணி நடைபெற்றுள்ளது.
இந்தக் கருத்துக்கணிப்பில் கிராமங்களை பொறுத்தவரையில் 40 சதவீத பெற்றோரும் நகரங்களை பொருத்தவரையில் 60 சதவீதத்திற்கும் மேலான பெற்றோரும் கலந்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தக் கருத்துக்கணிப்பில் 50 சதவீதத்திற்கும் அதிகமான பெற்றோர் பள்ளிகளைத் திறக்க திறக்கவேண்டாம் என கருத்து தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 9 ஆம் தேதி நடந்த இந்தக் கருத்துக்கணிப்பு கூட்டத்தில் பெறப்பட்ட இந்தக் கருத்துகள் அரசிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது என்றும், அதனை ஆராய்ந்து இறுதிகட்ட முடிவை அரசுதான் எடுக்கும் என்றும் பள்ளிக்கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதனிடையே, பள்ளிகள் திறப்பு தொடர்பாக இன்று கருத்து தெரிவித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள், "ஆந்திராவில் பள்ளி, கல்லூரிகள் திறந்த நிலையில், பல மாணவர்களும், ஆசிரியர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பல நாடுகளில் கொரோனாவின் இரண்டாம் அலை பரவி வருகிறது. நீதிபதிகள் உட்பட பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் சூழலில் குழந்தைகளும், மாணவர்களும் பாதிக்கப்பட்டால் சிரமம் ஏற்படும். ஆகவே, டிசம்பருக்குப் பின் பள்ளி, கல்லூரிகளைத் திறக்கலாமே" என்று கூறியிருப்பதும் கவனத்துக்குரியது.
அதேநேரத்தில், தூத்துக்குடியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "பெற்றோர் கருத்துக்களின் அடிப்படையில் பள்ளிகள் திறப்பு குறித்த முடிவு எடுக்கப்படும்" என தெரிவித்தார்.


இந்நிலையில், பள்ளிகள் திறப்பு இந்தக் காலகட்டத்தில் அவசியமா என்பதை அரசுப் பள்ளி ஆசிரியர் சாந்த சீலாவை தொடர்புகொண்டு பேசினோம்.
பள்ளிகள் - மாணவர்கள் சார்ந்த கள நிலவரம் குறித்து அவர் கூறும்போது, "ஊரடங்கு காலங்களில் இருக்கும் ஏழைப் பின்னணி கொண்ட குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விகுறியாகி இருக்கிறது. பெற்றோர் வேலைக்குச் சென்று விட, குழந்தைகள் வீட்டில் தனிமையில் இருக்கின்றனர். குழந்தைகளின் தனிமை பெற்றோரை கவலை அடைய செய்கிறது.
குழந்தைகள் பள்ளிக்கு வரும் பட்சத்தில், இந்தக் கவலை பெற்றோரிடம் இருக்காது.
ஆனால், தற்போதைய சூழலில் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில்தான் கவனம் செலுத்த வேண்டும். கொரோனா தொற்றுப் பரவல் முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்ட பிறகோ அல்லது தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான் அனைவருக்குமே பாதுகாப்பு என்பதையும் கவனத்தில்கொள்ள வேண்டும்.
கொரோனா கட்டுக்குள் வந்ததை உறுதி செய்த பிறகு, பள்ளிகள் திறக்கப்படும் பட்சத்தில் அரசானது, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உச்சபட்ச பாதுகாப்பை தரவேண்டும். குழந்தைகளை பகுதிநேர முறையிலோ அல்லது ஒருநாள் விட்டு ஒருநாள் என பள்ளிக்கு வரவழைக்கலாம். நீண்ட நாள்கள் குழந்தைகள் வீட்டில் இருந்ததால் அவர்களுக்கு பாடங்கள் மீதான ஈர்ப்பு குறைந்திருக்கும். ஆகையால் பாடங்களை கலை வழியாக மாணவர்களுக்கு கடத்துவது சாலச் சிறந்தது.


ஊரடங்கு காலத்தில் பெற்றோர் சந்தித்த பொருளாதார பிரச்னைகள் குழந்தைகளின் மனதில் உளவியல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்தியிருக்க வாய்ப்பு இருக்கிறது. ஆசிரியர்களும் இதுபோன்ற பிரச்னைகளை சந்தித்திருக்க கூடும். ஆகையால், அப்படியான பிரச்னைகளை எதிர்கொண்டிருக்கும் ஆசிரியருக்கு உளவியல் முதலுதவி பயிற்சி உளவியல் மருத்துவரால் அளிக்கப்படவேண்டும். அந்த ஆசிரியர் அந்தப் பயிற்சியை பிற மாணவர்களுக்கு வழங்கலாம். இறுதியான கருத்தாக, குழந்தைகளின் உடல்நலனுக்கே இப்போதைக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்பேன்" என்றார்.

- கல்யாணி பாண்டியன்