444 காவல் உதவி ஆய்வாளர்களுக்கான எழுத்து தேர்வு இன்று நடைபெற உள்ளது. முன்னெச்சரிக்கையாக வினாத்தாள் எடுத்து செல்லப்படும் வாகனங்கள் தீவிர கண்காணிக்கப்பட்டது.
2022ம் ஆண்டுக்கான 444 சப்இன்ஸ்பெக்டர் பதவிகளுக்கு தமிழ் மொழித் தகுதித் தேர்வு மற்றும் முதன்மை எழுத்துத் தேர்வுகளை அனைத்து பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய இயக்குனரகம் இன்று 25ம் தேதி சனிக்கிழமை நடத்துகிறது. காலை 10 மணி முதல் பகல் 12.30 மணி வரை முதன்மை எழுத்துத் தேர்வு நடக்கிறது. பகல் 3.30 மணி முதல் மாலை 5.10 மணி வரை தமிழ் மொழி தகுதித் தேர்வு அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் நடத்தப்படுகிறது.
தமிழ்நாடு முழுவதும் 39 மையங்களுக்குட்பட்ட 197 இடங்களில் தேர்வு நடக்கிறது. 2.21 லட்சம் பேர் இத்தேர்வை எழுதுகின்றனர். இத்தேர்வில் 43 திருநங்கைகள், 43,949 பெண்கள் உட்பட 2,21,213 பேர் எழுதுகின்றனர். சென்னையில் 10 இடங்களில் 1,506 பெண்கள் உட்பட 8,586 பேரும், ஆவடியில் 12 இடங்களில் 1,499 பெண்கள் உட்பட 8,493 பேரும், தாம்பரம் கமிஷனரக எல்லைக்குள் 11 இடங்களில் 1,516 பெண்கள் உட்பட 8,590 பேரும் இன்று தேர்வு எழுதுகின்றனர். 197 இடங்களிலும் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டுள்ளது.
வினாத்தாள் மற்றும் தேர்வுத் தாள்களை எடுத்துச் செல்லும் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டு, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய இயக்குனரகத்தில் இருந்து வாகனங்களின் இயக்கத்தை கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. நேற்று இரவு முதலே வினாத்தாள் எடுத்து செல்லும் வாகனங்கள் கண்காணிக்கப்படுகிறது.
அனைத்து இடங்களிலும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், தேர்வு எழுதுபவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணியவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாளை (ஜூன் 26) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை முதன்மை எழுத்துத் தேர்வு போலீஸ் துறை விண்ணப்பதார்களுக்கு நடத்தப்படுகிறது.