கல்வி

பத்தாம் வகுப்பு மனப்பாடப் பாடல்: குலசேகர ஆழ்வாராகவே மாறிய அரசுப் பள்ளி ஆசிரியர்

பத்தாம் வகுப்பு மனப்பாடப் பாடல்: குலசேகர ஆழ்வாராகவே மாறிய அரசுப் பள்ளி ஆசிரியர்

webteam

தமிழக பள்ளிப் பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு தமிழ்ப் பாடத்தில் உள்ள குலசேகர ஆழ்வாரின் பெருமாள் திருமொழி மனப்பாடப் பாடலை புதுமையான முறையில் காட்சிப்படுத்தியுள்ளார் தமிழாசிரியர் ச. ராஜன். செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி நந்திவரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக அவர் பணியாற்றிவருகிறார்.

குலசேகர ஆழ்வாராக வேடமிட்டு பெருமாள் திருமொழியின் "வாளால் அறுத்துச் சுடினும்..." என்ற பாடலைப் பாடியிருக்கிறார் தமிழாசிரியர் ராஜன். இதுபற்றி அவரிடம் பேசும்போது, "பள்ளிகள் திறக்கப்படவில்லை. மாணவர்கள் வீட்டில் இருக்கும்போது, மனப்பாடப் பாடல்களை அந்த கதாபாத்திரமாகவே மாறி நடிப்பதால் மாணவர்கள் மனத்தில் எளிதாகப் பதியும். இதுபோல பல ஆசிரியர்கள் செய்துவருகிறார்கள். பாடலில் வரும் கருத்துகள் அடிப்படையில் முழுமையான காணொலியாக தயாரிக்கும்போது மாணவர்களுக்குப் பயன்படுகிறது" என்று ஆர்வத்துடன் பேசுகிறார்.

தமிழாசிரியர் ராஜன் 

கொரோனா காலத்தில் முதல் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரையில் உள்ள மனப்பாடப் பாடல்களை இதுபோன்ற காணொலியாக மாற்றி தமிழ் முற்றம் என்ற யூ டியூப் சேனலில் மாணவர்களுக்குப் பயன்படும்வகையில் பதிவேற்றி வருகிறார் மதுரையைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் ஜெரோம்.

"ஒரு பாடலை காட்சியாகப் பார்க்கும்போது மாணவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும். மனப்பாடம் செய்யவேண்டிய வரிகளை எளிதாகப் புரிந்துகொள்வார்கள். இந்தக் காணொலிகள் மாணவர்களுக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் வாழும் தமிழ் ஆர்வலர்களுக்கும் பயன்படும்" என்றார் ஜெரோம். 

பாடல் படப்பிடிப்பின்போது... 

அடுத்து பாரதியாரின் ஓடி விளையாடு பாப்பா... என்ற பாடலை பாரதியாராக வேடமிட்டு காட்சியாக்கத் திட்டமிட்டு வருகிறார் தமிழாசிரியர் ராஜன். ஒவ்வொரு மனப்பாடப் பாடலையும் குறுநாடகமாக அரங்கேற்றி பதிவேற்றி வருகிறார்கள்.