கல்வி

தமிழகத்திலேயே முதன்முதலாக தமிழில் 100/100 மதிப்பெண் பெற்ற 12ம் வகுப்பு மாணவன்!

Sinekadhara

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவன் 12ஆம் வகுப்புத் தேர்வில் தமிழ் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று தமிழகத்திலேயே முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றுள்ளார்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீராம். இவர் குமாரபாளையம் அருகே உள்ள குப்பாண்டபாளையத்தில் இயங்கிவரும் தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு கணித அறிவியல் பாடத்தில் தமிழ் வழியில் படித்தார். இவர் கடந்த மாதம் நடைபெற்ற மேல்நிலை வகுப்பு பாடப்பிரிவு தேர்வு எழுதினார். இன்று தமிழக அரசால் மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த மதிப்பெண் பட்டியலில் இவர் தமிழில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று, மாநிலத்திலேயே தமிழ் பாடத்தில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர் என்ற சிறப்பைப் பெற்றுள்ளார்.

இவரை பள்ளியின் முதல்வர் மற்றும் ஆசிரியை, ஆசிரியர்கள் வெகுவாக பாராட்டினர். இது குறித்து ஸ்ரீராம் கூறுகையில், தனது பெற்றோரும், பள்ளியில் தமிழாசிரியருமான தமிழ்செல்வியும் தன்னை ஊக்குவித்ததன் காரணமாகவே தமிழ் பாடப்பிரிவில் அதிக மதிப்பெண் பெற்றதாகவும், தான் கால்நடை மருத்துவராக விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேபோல், தமிழ்நாடு 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும் இன்று வெளியானது. அதில் தமிழ்ப்பாடத்தில் முதல் முறையாக திருச்செந்தூரைச் சேர்ந்த மெட்ரிக் பள்ளி மாணவி ஒருவர் 10ஆம் வகுப்புத் தேர்வில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளார்.