குற்றம்

கட்டில் ஸ்டோரேஜில் அடைத்து வைக்கப்பட்ட இளைஞரின் சடலம்: அதிர்ச்சியான போலீஸ்

கட்டில் ஸ்டோரேஜில் அடைத்து வைக்கப்பட்ட இளைஞரின் சடலம்: அதிர்ச்சியான போலீஸ்

Sinekadhara

மேற்கு உத்தரபிரதேசம் மொரதாபாத்தைச் சேர்ந்தவர் சமீர் மாலிக்(27 வயது). கட்டட ஒப்பந்தக்காரரான இவர் தனது சிறுவயது நண்பரான சல்மானுடன் வடக்கு டெல்லி சாந்த் நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வேலைசெய்து வந்திருக்கிறார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்புதான் சல்மான் இவருடன் வந்து தங்கியிருக்கிறார்.

வெள்ளிக்கிழமையிலிருந்து வீடு பூட்டியிருக்கிறதைக் கண்ட வீட்டின் உரிமையாளர் இருவரின் எண்ணிற்கும் தொடர்புகொண்டிருக்கிறார். ஆனால் இருவரின் போனும் ஸ்விட்ச் ஆஃப் என்று வந்திருக்கிறது. சனிக்கிழமை மாலிக்கின் ஸ்கூட்டர் வீட்டிற்கு அருகிலிருந்த சாக்கடையை ஒட்டி கிடந்ததைப் பார்த்த உரிமையாளர், யாரேனும் வந்திருக்கிறார்களா எனப் பார்க்க சென்றிருக்கிறார். ஆனால் வீடு பூட்டியிருந்ததுடன், உள்ளிருந்து துர்நாற்றமும் வந்திருக்கிறது. இதனால் சந்தேகமடைந்த உரிமையாளர் மாலிக்கின் சகோதரர் சாரிஃபிற்கு தகவல் கொடுத்திருக்கிறார்.

அங்குவந்த மாலிக்கின் குடும்பத்தார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டில் ரத்தக்கறைகள் இருப்பதையும், காயங்களுடன் மாலிக்கின் உடல் பாதி அழுகிய நிலையில் கட்டிலின் ஸ்டோரேஜ் பாக்ஸில் அடைத்து வைத்திருந்ததையும் கண்டுபிடித்திருக்கின்றனர். இதுகுறித்து புராரி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது. சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், உடலை கைப்பற்றி அரசு உதவிபெறும் மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

இதுகுறித்து குடும்பத்தாரிடம் விசாரித்தபோது, வெள்ளிக்கிழமை மாலிக் தங்களுடன் பேசியதாகவும், அவருக்கு ரூ. 2.5 லட்சம் பணம் வரவிருப்பதாகவும் கூறியதாக போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர். சல்மான் காணாமல் போனதால், அவர்மீதுதான் சந்தேகம் இருப்பதாகவும் கூறியுள்ளனர். இதனால் இந்திய சட்டப்பிரிவு 302இன் கீழ் புராரி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.