Accused pt desk
குற்றம்

திண்டுக்கல்: திருடிய வாகனத்தில் காதல் மனைவியுடன் சென்ற இளைஞர்... மடக்கிப் பிடித்த போலீஸ்... பரபரப்பு

வேடசந்தூர் அருகே காதல் திருமணம் செய்து தனது மனைவியுடன் திருட்டு இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்ததால் மனைவி அதிர்ச்சியடைந்தார்.

webteam

செய்தியாளர்: காளிராஜன்.த

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள வடமதுரை ஓம் சக்தி கோவில் நகர் பகுதியை சேர்ந்தவர் வசந்த் (22). இவர், உடுமலைப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அப்போது இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி ஒருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலர்கள் இருவரும் நேற்று வீட்டை விட்டு வெளியேறி வடமதுரையில் உள்ள விநாயகர் கோயிலில் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.

Arrested

இந்நிலையில், இருவரும் பாதுகாப்பு கேட்டு வடமதுரை காவல் நிலையத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது அவர்களின் பின்னால் வேகமாக வந்த கார், இருசக்கர வாகனத்தை மறித்து நின்றுள்ளது.

இதையடுத்து அதிலிருந்து இறங்கிய விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், வசந்த்தை காரில் ஏற்றி வடமதுரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். ஆனால், காரில் வந்தவர்கள் காவல்துறையினர் என்று தெரியாமல், மணமகளின் உறவினர் என்று நினைத்து மணமகனின் நண்பர்கள் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து தாங்கள் காவல்துறையினர் என்றும், வேறு ஒரு வழக்கிற்காக வசந்த்தை கைது செய்வதாகவும் கூறி கல்லூரி மாணவியை வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதையடுத்து விருதுநகர் குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் விசாரித்தபோது, வசந்த் கடந்த 10 நாட்களுக்கு முன்பு விருதுநகர் பகுதியில் உள்ள ஒரு இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றதாகவும், அவர் வடமதுரையில் இருப்பது தெரிந்து அவரை பிடிப்பதற்காக சாதாரண உடையில் வந்ததாகவும் தெரிவித்தனர்.

Police station

ஆனால், காவல்துறையினர் தன்னை பிடிக்க வருவார்கள் என்று அறியாத வசந்த், இன்று திருமணம் செய்து கொண்டு, காதல் மனைவியுடன் திருடிய இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார்.

இந்நிலையில், காவல்துறையினர் வசந்தை கைது செய்து விருதுநகர் அழைத்துச் சென்றனர். இதைத்தொடர்ந்து வடமதுரை மகளிர் காவல்துறையினர் மாணவியின் பெற்றோரை வரவழைத்து அவர்களுடன் மாணவியை அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் வடமதுரையில் பரபரப்பு ஏற்பட்டது.