குற்றம்

திருட்டு வாகனத்தில் முதல்வர் கான்வாயை முந்த முயன்ற இளைஞர் கைது

திருட்டு வாகனத்தில் முதல்வர் கான்வாயை முந்த முயன்ற இளைஞர் கைது

Sinekadhara

சென்னையில் திருட்டு வாகனம் மூலம் முதல்வர் கான்வாயை முந்த முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று மதியம் தலைமை செயலகத்திலிருந்து புறப்பட்டு சென்றார். அப்போது அவரது கான்வாய் நேப்பியர் பாலத்தை வேகமாக கடந்து சென்றபோது திடீரென போலீஸ் பாதுகாப்பை மீறி எதிர் சாலையில் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்த நபர் கான்வாய் வாகனத்தை முந்த முயன்றிருக்கிறார். போலீசார் அந்த நபரை மடக்கி பிடித்தனர். அந்த நபர் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தில் நம்பர் பிளேட் இல்லாததால் சந்தேகமடைந்த போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கே.கே நகரை சேர்ந்த அஜித்குமார் என்பதும் அவர் ஓட்டிவந்த இருசக்கர வாகனம் திருட்டு வாகனம் என்பதும் தெரியவந்தது.

மேலும் எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் வாகனத்தை திருடி எடுத்து வந்தபோது முதல்வர் கான்வாய் செல்லும்வரை போக்குவரத்து நிறுத்திவைத்ததால், போலீசாரின் பார்வையில் சிக்காமல் தப்பிச்செல்ல கான்வாயை முந்த முயற்சித்ததாகவும், அப்போது சிக்கியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து திருடிய இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் அஜித்குமாரை கைதுசெய்து கோட்டை காவல் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இருசக்கர வாகனம் யாருடையது எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதே போல இன்று காலை ஆழ்வார்ப்பேட்டையில் முதல்வர் கான்வாய் வரும்போது, இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் முந்திச்செல்ல முயன்றபோது போக்குவரத்து போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில் அவர் புரசைவாக்கத்தை சேர்ந்த ஹிமாலய் மிஸ்ரா(24) என்பது தெரியவந்தது. இதனையடுத்து தேனாம்பேட்டை போக்குவரத்து போலீசார் மிஸ்ரா மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்துள்ளனர். ஒரே நாளில் இரண்டு இடங்களில் முதல்வர் கான்வாயை முந்த முயன்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளதால் கான்வாய் செல்லும் வழியில் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர்.