குற்றம்

செங்கோட்டையை தகர்ப்போம் - மிரட்டல் விடுத்தவர் கைது

செங்கோட்டையை தகர்ப்போம் - மிரட்டல் விடுத்தவர் கைது

webteam

டெல்லியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க செங்கோட்டையை வெடிகுண்டுகளால் தகர்ப்போம் என மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

டெல்லியில் உள்ள ரோஹினி பகுதியை சேர்ந்த நிதின் குமார் என்பவர் மாலை டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி வகுப்பில் இருந்தபோது அவரது கைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசியவர் தன்னை பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் என்று அறிமுகப்படுத்தி கொண்டுள்ளார். இன்றிரவு 8.30 மணியளவில் வெடித்து சிதறும் வகையில் டெல்லி செங்கோட்டைக்கு அடியில் வெடி குண்டுகளை பொருத்தி வைத்திருக்கிறோம். இதேபோல், டெல்லி கன்னாட் பிளேஸ் பகுதியில் உள்ள ஒரு
ஓட்டலிலும் குண்டுகள் வெடிக்கும் என்று கூறிய அந்த மர்மநபர் இணைப்பை துண்டித்துள்ளார். இதனால் பதறிப்போன நிதின் குமார் உடனடியாக பேகம்பூர் போலீஸ்
நிலையத்துக்கு இதுகுறித்து தகவல் அளித்தார். அந்த தகவலையடுத்து ரோகினி பகுதியில் உள்ள நிதின் குமாரின் வீட்டுக்கு போலீஸ் வாகனங்கள் படையெடுத்தன.
ஆனால், நிதின் குமாரின் தாயார், தனது மகன் பயிற்சி வகுப்புக்கு சென்றுள்ளதாக தெரிவித்தார்.

இதையடுத்து, அங்கிருந்தவாறு அருகாமையில் இருக்கும் பிரசாந்த் விஹார் போலீஸ் நிலையத்துக்கு உடனடியாக வருமாறு நிதின் குமாருக்கு போலீசார் தகவல்
அளித்தனர். அங்கு சென்ற அவரது கைபேசியை வாங்கி பரிசோதித்த போலீசார், பாகிஸ்தானில் இருந்து பேசுவதாக கூறிய நபர் டெல்லியில் உள்ள பார்கஞ்ச் பகுதியில்
உள்ள ஒரு ஓட்டலில் இருந்து பேசியதை கைபேசி சிக்னல் டவர் மூலமாக போலீசார் கண்டறிந்தனர். உடனடியாக, அந்த ஓட்டலுக்கு போலீஸ் படை விரைந்து சென்றது.
அங்கே இருந்த மெஹ்பூஸ் என்ற 22 வயது வாலிபரை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். பீகார் மாநிலத்தில் கிஷன்கஞ்ச் பகுதியை சேர்ந்த மெஹ்பூஸ், தற்போது அந்த ஓட்டலில் மேனேஜராக வேலை செய்து வருவதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. யாரையாவது பதற வைப்பதற்காக விளையாட்டுத்தனமாக சிலருக்கு போன் செய்ததாகவும், நிதின் குமார் தனது அழைப்பு ஏற்றதால் விளையாட்டாக இப்படி வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாகவும் போலீசாரிடம் மெஹ்பூஸ் தெரிவித்துள்ளார். எனினும், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக டெல்லி போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.