குற்றம்

உறவினர்கள் ஒப்புதலுடன் குழந்தை திருமணம் செய்த இளைஞர் கைது; 13 வயது கர்ப்பிணி சிறுமி மீட்பு

உறவினர்கள் ஒப்புதலுடன் குழந்தை திருமணம் செய்த இளைஞர் கைது; 13 வயது கர்ப்பிணி சிறுமி மீட்பு

நிவேதா ஜெகராஜா

ராஜபாளையம் அருகே 13 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பிணியாக்கியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். கருவுற்ற சிறுமி அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன் புத்தூரை அடுத்த மேலூர் துரைச்சாமி புரத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. 28 வயதான இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த தன்னுடைய உறவினர் மகளான 13 வயது சிறுமியை காதலித்து, உறவினர்கள் சம்மதத்துடன் கடந்த ஆண்டு திருமணம் செய்துள்ளார். தற்போது அச்சிறுமி 5 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

இந்நிலையில், அச்சிறுமி அப்பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தனக்கு வயது 19 எனக் கூறி கர்ப்பிணிகளுக்கு செய்யப்படும் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி செலுத்த சென்ற போது, ஆதார் அட்டை மூலம் இவரது வயது 13 என உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனை அடுத்து அரசு மருத்துவர் மூலம் மகளிர் நல அலுவலகத்திற்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றும் மகளிர் ஊர் நல அலுவலர் அனுராதா அளித்த புகாரின் பேரில், மாரிமுத்துவை போக்சோ சட்டத்தின் கீழ் அனைத்து மகளிர் காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர் கர்பிணியான சிறுமியை மீட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறையினர், அவரை விருதுநகரில் செயல்படும் அரசு மகளிர் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.