குற்றம்

இளம் பெண் எரித்துக் கொலை - திருமணமாகி குழந்தைகள் இருப்பது தெரிந்ததால் கொடூரம்

இளம் பெண் எரித்துக் கொலை - திருமணமாகி குழந்தைகள் இருப்பது தெரிந்ததால் கொடூரம்

webteam

இராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கையை அடுத்த ஆலங்குளம் பகுதியை சேர்ந்தவர் வீரபாண்டி. சென்னையிலுள்ள ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தில் காண்ட்ராக்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கலைச்செல்வி, சொந்த கிராமத்திலேயே தங்கி விவசாயம் பார்த்து வருகிறார். இவர்களது இரண்டாவது மகள் மாலதி சென்னையிலுள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ படித்துவிட்டு, அங்கேயே வேலை தேடி வந்துள்ளார். அவ்வவ்போது தனது தனது தந்தைக்கு உதவியாக கட்டுமான நிறுவனத்திலும் வேலைபார்த்து வந்தார். நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவ்வப்போது ஆலங்குலத்திலுள்ள தனது தாயை பார்க்க செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

இந்நிலையில் கிராமத்திற்கு வந்துசெல்லும் மாலதிக்கும் அந்த பகுதிக்கு சீட்டு வசூலிக்க வரும் கருங்குளம் பகுதியை சேர்ந்த சிவகுமாருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் பழக்கம் பின்னர் காதலாக மாறியது. வேலை தேடி மீண்டும் மாலதி சென்னை சென்றுள்ளார். பின்னர் சென்னையில் மாலதி இருக்கும் இடத்திற்கு அருகாமையிலேயே வாடகைக்கு வீடு எடுத்து சிவக்குமார் தங்கியுள்ளார். அதோடு ஒரு தனியார் நிறுவனத்திலும் வேலைக்கு சேர்ந்தார். சென்னையில் இருவரும் தொடர்ந்து பழகி வந்துள்ளனர். திருமணம் செய்து கொள்வதாக சிவக்குமார் அளித்த வாக்குறுதியை நம்பி அவருடன் மாலதி பழகி வந்துள்ளார். ஆனால், மாதங்கள் பல சென்ற நிலையில், சிவக்குமார் திருமண பேச்சை எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதற்கிடையில், சிவக்குமாருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன செய்தி மாலதிக்கு கிடைத்துள்ளது. அதுகுறித்து சிவக்குமாரிடம் கேட்டுள்ளார். அப்போது, தனக்கு முதல் மனைவி முக்கியமில்லை நீ தான் முக்கியம் என்று மாலதியிடம் சிவக்குமார் கூறியுள்ளார். உடனே திருமணம் செய்து கொள்ளுமாறு மாலதி வற்புறுத்தியுள்ளார்.

ஆனால், மாலதியிடம் சொல்லிக் கொள்ளாமல் சிவக்குமார் ராமநாதபுரத்தில் உள்ள தனது சொந்த ஊருக்கு சென்றுவிட்டார். அதனையடுத்து, கடந்த 29ம் தேதி சென்னையிலிருந்து கிளம்பி சொந்த ஊருக்கு சென்றுள்ளார் மாலதி. இதனிடையே, சிவக்குமார் தன்னுடைய மகளை காதலித்து ஏமாற்றிவிட்டதாக மாலதியின் தாயார் போலீசார் புகார் அளித்துள்ளார். காவல்துறையினர் புகாரைப் பெற்றுக் கொண்டு விசாரிப்பதாக தெரிவித்து விட்டனர். இதற்கிடையில் தன்னை திருமணம் செய்து கொள்ளுபடி சிவக்குமாரிடம் மாலதி தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார். சிவக்குமாரும் தஞ்சாவூரில் உள்ள கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று மாலதியிடம் கூறியுள்ளார். சிவக்குமார் சொன்ன வார்த்தையை நம்பி மாலதியும் கிளம்பி சென்றுள்ளார். அம்மா கலைச் செல்வியிடம் தோழியின் திருமணத்திற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஊருக்கு சென்ற மாலதி வீடு திரும்பவில்லை என்பதால் கலைச்செல்வி அச்சமடைந்துள்ளார். 

இந்தநிலையில், தன்னுடைய மகளை காணவில்லை என்று கலைச்செல்வி உத்திரகோசமங்கை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சிவகுமாருடன் தான் தன்னுடைய மகள் சென்றிருக்கலாம் என்றும் மகளை கண்டுபிடித்து தன்னிடம் ஒப்படைக்குமாறு கலைசெல்வி தனது புகாரில் தெரிவித்துள்ளார். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட உத்திரகோசமங்கை போலீசார் சிவகுமாரின் செல்போன் என்னை வைத்து மாலதியுடன் பேசியதை உறுதிசெய்தனர். அதன் அடிப்படையில் சிவகுமாரை அழைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது மாலதியை காதலித்ததையும் அவர் வீட்டிலிருந்து கிளம்பி வந்ததையும் சிவக்குமார் ஒத்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. அதேபோல், மாலதி தஞ்சாவூரிலுள்ள உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்றிருப்பதாகவும், வந்தவுடன் ஒப்படைப்பதாகவும் கூறியுள்ளார். சிவக்குமார் அளிக்க வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர் மாலதியை ஒப்படைத்து விடுவார் என்று நம்பி போலீசாரும் அவரை விட்டுவிட்டனர். ஆனால், அன்று முதல் சிவக்குமார் செல்போன் எண் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டது. பின்னர் தான் சிவகுமார் தலைமறைவு ஆனது தெரியவந்தது. 

அதன்பிறகு போலீசார் மேற்கொண்ட விசாரணையில், சிவகுமாருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருந்துள்ள தகவல் தெரியவந்துள்ளது. இதனிடையே, எரிக்கப்பட்ட நிலையில் இளம் பெண்ணின் எலும்புக் கூடு கருங்குளம் காட்டுப்பகுதியிலே கிடைத்துள்ளது. ஒரு வாரத்திற்கு முன்பாகவே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது என்பது போலீஸ் விசாரணையில் பின்னர் தெரியவந்துள்ளது. முழுவதும் எரிந்த நிலையில் எழும்பு கூடாக கிடந்த சடலத்தின் அருகாமையில், மாலதி கடைசியாக அணிந்திருந்த சுடிதாரின் சால் மற்றும் அவர் அணிந்திருந்த வளையல்களை வைத்துதான் அது மாலதியாக இருக்கக் கூடும் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இருப்பினும், எரியப்பட்ட நிலையில் உள்ள எலும்புக் கூடு மாலதி உடையதுதான் என்பதை உறுதி செய்ய சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எப்படி கொலை நடந்தது என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பே மாலதியை எரித்துக் கொன்றுவிட்டு சிவக்குமார் போலீசிடம் நாடகமாடியதாக கூறப்படுகிறது. மாலதி கொலையில் சிவக்குமார் மட்டும் தான் ஈடுபட்டுள்ளாரா? மற்றவர்கள் யாரேனும் இருக்கிறார்களா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.