திருமணமான பெண்ணுடன் உறவில் இருந்த இளைஞரை அந்த பெண்ணின் சகோதரர்களே கொன்று வீசிய சம்பவம் நொய்டாவில் நடந்துள்ளது.
நொய்டாவிலுள்ள பாலி கிராமத்தைச் சேர்ந்தவர் ராபின். 23 வயதான இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த திருமணமான ஒரு பெண்ணுடன் உறவில் இருந்திருக்கிறார். இதற்கிடையே ராபினுக்கு வேறொரு பெண்ணுடன் திருமண ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில் ராபின் காணாமல் போய்விட்டதாக அவரது குடும்பத்தினர் திங்கட்கிழமை காலை சுரஜ்புர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கின்றனர். புகாரின் அடிப்படையில் ராபினின் செல்போனை சோதனை செய்ததில் அவர் கடைசியாக ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணிக்கு தன்னுடன் உறவில் இருந்த பெண்ணுக்கு அழைத்திருந்தது தெரியவந்தது.
அதன் அடிப்படையில் அந்த பெண்ணின் குடும்பத்தாரை விசாரித்ததில் அவருடைய சகோதரர் இருவர்பேரில் சந்தேகம் எழவே இருவரையும் தனியாக அழைத்து விசாரித்திருக்கின்றனர். அப்போது அவர்கள் இருவரும் ராபினை கொலைசெய்ததை ஒப்புக்கொண்டனர். ஞாயிற்றுக்கிழமை இரவு தங்கள் சகோதரியுடன் ராபின் இருப்பதை பார்த்து ஆத்திரமடைந்த சகோதரர்கள், இருவரும் ராபினை கழுத்தை நெரித்துக்கொலை செய்ததாகவும், பிறகு ராபினின் உடலை கங்கா கால்வாயில் தூக்கி வீசிவிட்டதாகவும் கூறியிருக்கின்றனர்.
இதுகுறித்து கூடுதல் துணை கமிஷனர் இளமாறன், ராபினின் உடல் இதுவரை கிடைக்கவில்லை எனவும், கங்கா கால்வாயில் உடலை தேடும்பணி நடைபெற்று வருகிறது எனவும் தெரிவித்தார். மேலும், உடல் கிடைத்தபிறகுதான் அந்த பெண்ணின் சகோதரர் இருவர் மீதும் கொலைவழக்குத் தொடரப்படும் என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில், போலீஸ் தாமதமாக விசாரணையை தொடங்கியதால்தான் ராபின் இறந்துவிட்டதாகக் கூறி, அவருடைய உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் ராபினின் உடல் விரைவில் மீட்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி அனுப்பிவைத்துள்ளனர்.